TamilSaaga

சென்னையில் இருந்து சைக்கிளிலேயே சிங்கப்பூர் வந்த “தமிழன்”… விடாப்பிடியாய் நின்று சாதித்த ஒரு டிரைவரின் மகன்

உலகின் 11 நாடுகளை சைக்கிளிலேயே சுற்றிய தமிழர் பற்றிய கட்டுரை இது. நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளத்துக்கு எக்ஸ்க்ளூசிவாக அளித்த பேட்டி இங்கே. இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக,

“என்னுடைய பெயர் அருண் ராகேஷ் (28). அப்பா பெயர் ராஜய்யா பஸ் டிரைவர்-ஆக பணிபுரிகிறார். அம்மா பெயர் ராஜகண்ணி. அப்பா அம்மாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. எனக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில தான். நான் B.Sc Computer Science முடிச்சிட்டு IT கம்பெனியில வேலை செய்து வந்தேன். பொதுவாக Travel பண்றதுக்கு ரொம்ப பிடிக்கும், நிறைய இடங்களுக்கும் சென்றுள்ளேன். சுற்றுலா தளங்களுக்கு சென்றால் அந்த இடத்தை மட்டும் பார்த்துட்டு திரும்ப வந்துவிடுவோம். Discovery சேனல்கள் பார்க்கின்ற மாதிரி, எப்படி அவர்கள் மட்டும் Travel பண்றாங்க காட்டுக்குள்ளே தங்குறாங்க நாமளும் அப்படி போகனும்னு ஒரு ஆர்வம். அவர்களை போல எப்படி Explore பண்றது அப்படினு யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் சைக்கிள் பயணம் போகலாம் என்று ஐடியா வந்தது.

சைக்கிள் பயணம்

2019ல் என்னுடைய சைக்கிள் பயணத்தை தொடங்கினேன். இதுவரை இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, அமீரகம் (அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன்) என்று 11 நாடுகளுக்கு சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளேன். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 220 கி.மீ வரை ஓட்டியுள்ளேன். 11,000 கி.மீ சைக்கிளில் சென்றுள்ளேன். இதற்காக நான் செலவு செய்தது 7,30,000 தோராயமாக.

2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் ஆரம்பித்து அங்கிருந்து நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மியான்மர் வரை சென்றேன். 2020ல் கோவிட்19 காரணமாக தாய்லாந்து எல்லை வரைச் சென்று இந்தியாவிற்கு திரும்பி விட்டேன். முதல் 5 மாதங்களில் 4 நாடுகளுக்கு மட்டுமே சென்றேன். அதன்பிறகு கோவிட்19 கட்டுப்பாடுகளை அனைத்து நாடுகளும் தளர்த்திய பின் எல்லைகளும் திறக்கப்பட்டது. அமீரகத்திற்கு சைக்கிள் பயணம் செய்தேன். அங்கு Highways-ல அனுமதி பெற்று தான் சைக்கிள்-ல போகனும். மோட்டார் சைக்கிள், சைக்கிள் இரண்டுக்குமே அனுமதி இல்லை. அமீரகத்தில் சாலைகள் எல்லாமே நல்ல இருந்தது. சாலையில் வரும் வாகனங்கள் தான் அதிவேகமாக வருகிறது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு சைக்கிள்-ல போனேன். அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது அதிகம். சீக்கிரம் உடம்பு Dehydrate ஆகிவிடும். இருந்தாலும் எனக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அடுத்து லடாக் சென்றேன். அங்கு போகும் போது ‘கியர்’ சைக்கிள் இல்லாமல் சாதரண சைக்கிள்-ல பயணத்தை முடித்தேன். 2022ல் தாய்லாந்து, மலேசியா சென்றேன்.

சிங்கப்பூர் பயணம்

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வருவதற்கு 8 மாதங்கள் 10,000 கி.மீ கடந்து வந்தேன். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கு 2 முறை முயற்சி செய்தேன், விசா கிடைக்கவில்லை. அங்கு இருந்தவர்கள் இந்தியாவுக்கு சென்று Apply பண்ண சொன்னார்கள். இந்தியா போயிட்டு அங்கிருந்து வரணும்னா ரொம்ப நாட்கள் ஆகும். அதனால் இந்தோனேசியா சென்று ஒரு வாரம் தங்கியிருந்தேன். விசா கிடைத்ததும் உடனே சிங்கப்பூருக்கு வந்து விட்டேன். சிங்கப்பூரில் உள்ள இன்ஸ்டாகிராம் மூலம் தெரிந்த அண்ணா ஒருவர் தான் சிங்கப்பூர் வருவதற்கு விசா Apply செய்து கொடுத்தார். அங்குள்ள தமிழர்கள் அனைவருமே அவர்கள் வீட்டில் ஒருவராக நினைத்து ரொம்ப பாசமாக இருந்தார்கள். நிறைய இடங்களுக்கு காரில் என்னை அழைத்துச் சென்றனர். உண்மையில் சிங்கப்பூர் பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருந்தது. என்னை யாருக்குமே தெரியல என்றாலும் கூட தமிழர் என்ற அடையாளத்துடன் சிங்கப்பூரில் தமிழர்களுடன் 1 வாரம் தங்கியிருந்தேன்.

அவர்களுடன் இருக்கும் போது எனக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்தார்கள். ஒரு ரூபாய் கூட நான் செலவு செய்யவே இல்லை. சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்தேன். தமிழர்கள் நிறைய உதவி செய்தார்கள். இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள். நான் தான் அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம் என்று இந்தியாவிற்கு வந்து விட்டேன். அங்கிருந்து வருவதற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏதோ நம்ம வீட்டுல இருக்கறவங்கல விட்டு பிரியற மாதிரி ஒரு Feeling. சிங்கப்பூர், மலேசியா இரண்டு நாடுகளுக்கு சென்ற போதும் தமிழனாக இருப்பதற்கு நான் ரொம்பவே பெருமைப்பட்டேன்.

மறக்கமுடியாத தருணங்கள்

மியான்மர் சென்ற போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். கிராமங்களின் வழியாக சென்றதால் மொழி பிரச்சனைகள் நிறைய இருந்தது. ஒரு சதவீதம் கூட அங்கு இருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியல. அவர்களை தொடர்பு கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். டென்ட்ல தான் நான் அதிகமாக தாங்குவேன். மியான்மர் சென்ற போது அங்கு போர் நடந்து கொண்டிருந்தது. அதனால டென்ட் போடுவதற்கு அனுமதி தரல. ஹோட்டலில் தங்கியிருந்ததால் செலவுகள் அதிகரித்தது. சாப்பாடு செய்வதற்கு சின்ன சிலிண்டரை எல்லா இடங்களுக்கும் எடுத்துட்டு போவேன். இந்தியா-மியான்மர் எல்லையில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது என்று சொல்லிட்டாங்க. மியன்மாரில் ஹோட்டல் உணவு எனக்கு செட் ஆகல. அங்கிருந்து வருவதற்கு 20 நாட்கள் ஆனது. அதுவரைக்கும் பிஸ்கட், பழங்கள் மட்டும் தான் சாப்பிட்டேன். இதனால் என்னுடைய உடல் எடை 10கி குறைந்தது. நேபாளத்தில் சாலைகள் மோசமாக இருக்கும். விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. காட்டில் தூங்குவதற்கு இரண்டு மரங்களுக்கு நடுவில் டென்ட் போட்டு இருந்தேன்.

அப்போது ஒருநாள் இரவு நேரத்தில், ‘டொம் டொம்’ என்று சத்தம் கேட்டது. டென்ட்டில் இருந்து எட்டி பார்த்த போது 2 யானைகள், 1 குட்டி யானையுடன் மரத்தை உராய்ந்து விட்டு சென்றது. நான் மட்டும் மரங்களுக்கு இடையே இல்லாமல் சமவெளியில் டென்ட் அமைத்து இருந்திருந்தால் உயிரோடு இருந்து இருக்க முடியாது.

அடுத்த இலக்கு

என்னுடைய அடுத்த இலக்கு ஆர்டிக் – அண்டார்டிகா வரை உள்ள 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு ‘World Record’ சாதனை படைப்பதே” என்று தனது லட்சிய பயணத்தை பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts