ஒரு வெளிநாட்டு ஊழியரை எப்படியெல்லாம் நடத்தக் கூடாதோ, அப்படியெல்லாம் நடத்தி அவமானப்படுத்தி இருக்கிறார் சிங்கப்பூரில் ஒரு பெண்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Zhao Lin. வயது 35. இவரது வீட்டில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த Ma Ei என்ற பணிப்பெண் ஒருவர் வேலைப் பார்த்து வந்திருக்கிறார்.
ஆனால், Zhaoக்கு இப்பெண்ணின் வேலையில் திருப்தி இல்லை என்று தெரிகிறது. இதனால், அவரது சம்பளத்தில் 500 டாலரை குறைத்த Zhao, சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை இஷ்டத்துக்கு அடிப்பது, உதைப்பது என உடல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார்.
அதுவும், தனது 4 வயது குழந்தையின் முன்பாகவே, அந்த பணிப்பெண்ணை பலமுறை கன்னத்தில் அறைந்து அடித்திருக்கிறார். ஒருக்கட்டத்தில் இவரது டார்ச்சர் வெளியே அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்து நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
நீதிமன்றத்தில் விசாரித்த போதுதான், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. கடந்த 2016ம் ஆண்டு தொடக்கத்தில் மியான்மரில் இருந்து சிங்கப்பூர் வந்த Ma Ei, அப்போதிலிருந்தே Zhao வீட்டில் தான் வேலை செய்து வந்திருக்கிறார்.
காலை 6.30 மணிக்கு தொடங்கும் Ma Ei-ன் வேலை, நள்ளிரவு வரை நீடித்துள்ளது. வீட்டு வேலைகளைச் செய்வதும் Zhao-வின் மகனைக் கவனித்துக்கொள்வதும் தான் அவரது மிக முக்கிய பணி. 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தான் உடல் ரீதியான தாக்குதல் தொடங்கியிருக்கிறது. எப்போதாவது சரியாக வேலை செய்யவில்லை எனில், உடனே அடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 25, 2018 அன்று, Zhao தனது மகனின் பொம்மைகள் சரியாக அடுக்கப்படவில்லை என்று கூறி, Ma Ei கன்னங்களில் 10 முறை தொடர்ச்சியாக அறைந்திருக்கிறார். ஒவ்வொரு அறையின் போதும், பின்பக்கம் தள்ளி தள்ளி அடித்திருக்கிறார். இவை அனைத்தும் நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடித்தது மட்டுமின்றி, “நீ உண்மையிலேயே எனக்கு பயப்படும் வரை நான் அடித்துக் கொண்டே இருப்பேன்” என்று சைக்கோவாகவே மாறி பேசியிருக்கிறார்.
அதே நாளில் மாலை 4.30 மணியளவில், அறையை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று கூறி, Zhao பணிப்பெண்ணை மீண்டும் மீண்டும் அறைந்திருக்கிறார்.
ஏன் அடிக்கிறீர்கள் என்று பணிப்பெண் கேள்வி எழுப்ப, அதற்கும் கோபமடைந்து காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜாவோவின் மகன் தன் தாயிடம், “ஏன் sister-ஐ அடிக்கிறீங்க?” என்று கேட்க, அதற்கு அப்பெண், “sister தவறு செய்தார், sister அம்மாவை அடித்தார்” என்று சொல்லியிருக்கிறார்.
இனியும் அமைதியாக இருக்க முடியாது என்று நினைத்த பணிப்பெண், அன்று மாலை 5.15 மணிக்கு காவல்துறையிடம் புகார் அளிக்க, அதை மறைந்திருந்து பார்த்த ஜாவோ அதற்கு அப்பெண்ணை அடித்துள்ளார்.
சிறுது நேரத்தில் வீட்டிற்கு வந்த போலீசார், சிசிடிவி வீடியோக்களை காட்ட சொன்னதற்கு ஜாவோ மறுத்துவிட்டார். பின்னர் அவரின் கணவர் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து காட்ட, அதில் பணிப்பெண் சொன்னது அனைத்தும் உண்மை என்பது நிரூபணமானது. இதனால், ஜாவோ மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாவோவும் விசாரணையின் போது, தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
எனவே, ஜாவோவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் $5,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. வீட்டுப் பணியாளருக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டால், முதலாளிக்கு 1½ மடங்கு அதிக அபராதம் விதிக்கப்படலாம என்பதும் குறிப்பிடத்தக்கது.