சிங்கப்பூரில் கோவிட்-19 பரவலின் மத்தியில் சமூகத்திற்காக பல முன்கள பணியாளர்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் செவிலியர்களின் பணி என்பது நாம் போற்றவேண்டிய செயலாக உள்ளது என்றே கூறலாம். ஆனால் சிங்கப்பூரில் தங்களது அண்டை வீட்டில் வசித்து வந்த செவிலியர் ஒருவரை பாராட்டுவதற்கு பதிலாக பல புண்படுத்தும் வார்த்தைகளால் திட்டிய ஒரு தம்பதியில் செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது.
குற்றம் நடந்த போது, செவிலியர் செங்காங் பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த சிங்கப்பூர் தம்பதிகள் – லிம் சோக் லே (49), மற்றும் அவரது கணவர் சியாங் எங் ஹாக் (57) இன்று செவ்வாயன்று (பிப்ரவரி 8) தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டனர். சியாங்கிற்கு $1,200 அபராதமும், அவரது மனைவிக்கு $4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர்கள் புங்கோலில் உள்ள எட்ஜ்ஃபீல்ட் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கள் அண்டை வீட்டாரை துன்புறுத்தியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த தம்பதியினர் “கோவிட் பரப்பிகள்” மற்றும் “வைரஸ் குடும்பம்” உள்ளிட்ட சொற்றொடர்களைக் அடிக்கடி கூச்சலிடுவது போன்ற செயல்களால் தங்கள் அண்டை வீட்டாரை புண்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் அந்த தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது, மேலும் லிம் மனநல மதிப்பீட்டிற்காக மனநல நிறுவனத்தில் (IMH) ரிமாண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. அடுத்த மாதம், அதாவது கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஒரு IMH மனநல மருத்துவர், அவருக்கு எந்தவிதமான மனநலக் கோளாறும் இல்லை, என்பதைக் கண்டறிந்தார்.
லிம் பின்னர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து மேல் முறையீடு செய்தார், ஒரு மாவட்ட நீதிபதி 14 நாள் காவலில் தங்களை வைக்க உத்தரவிட்டது நியாயமானதல்ல மற்றும் “கடுமையான அநீதி” என்று அவர் வாதிட்டார். வழக்கு பின் உயர்நீதிமன்றம் செல்ல அங்கு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வின்சென்ட் ஹூங், கடந்த ஆண்டு செப்டம்பரில் மனுவை தள்ளுபடி செய்தார், மேலும் கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பில் எந்த தவறும் செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.
“பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பின் உணர்வை பாதிக்கும் எந்தவொரு நடத்தையையும் காவல்துறை மன்னிப்பதில்லை. மேலும் நமக்காக இந்த கடுமையான நேரங்களில் தங்கள் உயிரை துச்சமெனமதித்து போராடும் பணியாளர்களை கனிவோடு நடத்தவேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.