சாங்கி விமான நிலையத்தில் இருந்து தொடங்கும் டாக்ஸி பயணங்களுக்கான (Surcharge) கூடுதல் கட்டணம் தற்போது S$3 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் ஃபேஸ்புக்கில் இன்று மே 12 அன்று வெளியான பதிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை – S$8
மற்ற எல்லா நேரங்களிலும் – S$6
தற்போது, இந்த கட்டணங்கள் :
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை S$5 ஆகவும்,
மற்ற எல்லா நேரங்களுக்கும் S$3 ஆகவும் உள்ளது.
பயணிகளுக்கு டாக்சிகளின் “சிறந்த சேவை” கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள்ளது என்று விமான நிலையம் மேலும் கூறியது.
அதிக எரிபொருள் செலவுகள், பயணிகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை மற்றும் சிங்கப்பூரின் Central Business District பகுதியில் சவாரியை எடுக்கும்போது அதிக அளவில் லாபம் கிடைப்பது போன்ற காரணங்களால் டாக்ஸி ஓட்டுநர்கள் விமான நிலையத்தைத் தவிர்ப்பதாக கடந்த மே 2ம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு அதிக ஓட்டுநர்களை ஈர்க்கும் முயற்சியில், கடந்த ஏப்ரல் மாதத்தில் சாங்கி விமான நிலையம், டெர்மினல் 1, டெர்மினல் 3 அல்லது ஜுவல் சாங்கி விமான நிலையத்திலிருந்து காலை 6 மணி முதல் 10 மணி, மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை குறைந்தபட்சம் மூன்று ட்ரிப்களை மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்கு S$10 வெகுமதியாக வழங்கியது.
சர்வதேச பயணங்கள் தற்போது புத்துயிர் பெற்றுள்ள நிலையில் சாங்கி விமான நிலையம் வரும் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டுள்ளது. அதை முன்னிட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.