திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது நம் வழக்கு மொழி. அத்தகைய நிச்சயக்கப்பட்ட திருமணங்களை சிறப்பாக நடத்திக் காட்டுவது ஒவ்வொருவரின் கனவாகவே இருக்கிறது. நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, குலம், கோத்திரம் பார்த்து தான் பெரும்பாலான திருமணங்கள் இன்றைக்கும் இங்கே நடத்தப்படுகின்றன. சாதி, மதம் பார்க்காத கலப்பு திருமணங்கள் ஓரளவிற்கு இன்றைக்கு வளர்ந்து இருக்கின்றன என்றாலும் , இன்னும் கூட மற்ற நாடுகளை போல இந்தியா – தமிழகத்தில் அவை முக்கிய இடத்தை வகிப்பதில்லை.
இப்படி ஒரு சூழலில் தமிழகத்தில், ஒரு குக்கிராமத்தில், ஒரு குறிப்பிட்ட, கட்டுப்பாடான, சாதி, பண்பாட்டு, பழக்க வழக்கங்கள் உடைய ஊரில் பிறந்த ஒரு மாப்பிள்ளை ஒரு வெளிநாட்டு மருமகளை பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்போது என்ன மாதிரியான சம்பவங்கள், அனுபவங்கள், நிகழ்வுகள், எல்லாம் நடக்கின்றன. அவைகளின் பின்னணி என்ன? இத்தகைய ஒரு கலப்பு கலாச்சார திருமணம் உண்டாக்கக்கூடிய எதார்த்தமான மாற்றங்கள் என்னென்ன ? இந்த சுவாரசியமான பின்னணியை அறிந்துகொள்ள ஒரு உண்மையான திருமண நிகழ்வை ஒட்டிய சூழலை அலசிப் பார்ப்போம்.
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தமிழக இளைஞரின் கரம்பிடித்த ஆஸ்திரேலிய மணமகள்
நான் கதையும் காரணமும் பேசிக்கொண்டிருப்பது இந்த திருமணத்தின் அடிப்படையில் தான்…. சில ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழகத்தில் நடைபெற்ற இப்படி ஒரு திருமணம் நாளிதழ்களில் மிக முக்கிய இடத்தை பிடித்திருந்தது.
மணமகன் முசுகுந்த நாடு என்று சொல்லப்படுகிற, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றைக்கும் 32 கிராமங்களை உள்ளடக்கி இருக்கிற ஒரு பகுதியின், வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்த, வெளிநாட்டில் பணி செய்யும் பட்டதாரி செல்வராஜ். மணமகள் ஆஸ்திரேலிய நாட்டின் அமாண்டா. இந்த நாடு விட்டு நாடு திருமணம் அந்த பாரம்பரியமான கிராமத்தில், குடும்பத்தில் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது? என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது?
முசுகுந்த வெள்ளாளர்களும், சிங்கப்பூரும்….
முசுகுந்த வெள்ளாளர்கள் இன்றைக்கும் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில் வாழக்கூடிய, கட்டுப்பாடான, வழிவழியாக பின்பற்றப்படும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள். கட்டுக்கோப்பான கிராமத்து சமூகம் என்றாலும் கூட இவர்களும் மற்ற தமிழ் குடிகளை போலவே மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் முதன்முதலாக 1950களில் சிங்கப்பூர் வந்து ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் வேலை வாய்ப்புகளுக்காக முயற்சி செய்துள்ளனர். ஆரம்ப கட்டத்தில் அவர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவும், வியாபாரிகளாகவும், இருந்திருக்கின்றனர். பின்னர் அரசு ஊழியர்களாகவும் பணிபுரிந்துள்ளனர்.
இன்றைக்கும் சிங்கப்பூரில் 80க்கும் மேற்பட்ட முசுகுந்த வேளாளர் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நான் முன்னர் குறிப்பிட்ட இந்த முசுகுந்த வேளாளர்களின் 32 கிராமங்களில், சூரப்பள்ளம் என்னும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ளவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்தவர்கள். தொடக்கத்தில் உடலுழைப்பு தொழிலாளர்களாக சிங்கப்பூர் வந்த முசுகுந்த வேளாளர்கள் இனத்திலிருந்து, சமீபகாலத்தில் IT, இன்ஜினியரிங், போன்ற தொழில்கள் வேலை செய்யும் திறமையான இளைஞர்கள், இளம் தம்பதிகள் அதிக அளவில் இருக்கின்றர். இது அவர்கள் சமூகத்தின் பரவலை அதிகப்படுத்துவதுடன், கிராமத்திற்கும் அவர்களுக்கும் இடையிலான உறவுகளை இன்னும் உறுதிப்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை.
மணமகன் செல்வராஜின் குடும்பம் :
இப்படி சிங்கப்பூருக்கு குடி பெயர்ந்த பிறகும், கிராமத்தோடு தொடர்புகளை உறுதிப்படுத்தியிருக்கும் குடும்பங்களில் ஒன்றுதான் மணமகன் செல்வராஜின் குடும்பமும். இவரின் பெற்றோருக்கு சிங்கப்பூரில் ஒரு வீடும், அவர்கள் கிராமத்தில் ஒரு வீடும் இருக்கிறது வருடத்தில் இரண்டு வீடுகளிலும் இரண்டு இடங்களிலும் இவர்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். செல்வராஜின் அண்ணன் அந்த கிராமத்திலிருந்தே பெற்றோர் பார்த்து வைத்த திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பெற்றோரோடு சிங்கப்பூரில் வசித்து வருகிறார். வெளிநாடுகளில் குடியேறினாலும், இவர்கள் சொந்த கிராமத்தோடு கிராமத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை உடையவர்களாக இருக்கிறார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு கிராமத்தில் வெளி நாட்டில் வாழக்கூடிய ஒருவர், உள்ளூரின் கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் பறந்து பறந்து தனது கிராமத்து தலைவர் கடமையை கிராமத்திற்கும் சிங்கப்பூர் வாழ் குடும்பங்களுக்கும் செய்து வருகிறார் என்னும் ஆச்சரியமான உண்மையை முன் உதாரணமாக கொள்ளலாம்.
செல்வராஜின் காதலும், அவரை பயமுறுத்திய சிங்கப்பூர் இளங்கோவன் கதையும் :
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளில், பல்வேறு ஆசிய நாடுகளில், பரவி, வளர்ந்து, வாழ்ந்து வந்தாலும் கூட இவர்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை என்பது இன்றைக்கும் சற்றும் மாற்றம் அடையாமலேயே தொடர்ந்து வருகிறது. இப்படி ஒரு கட்டுக்கோப்பான கிராம சூழலில், சமூக பின்னணியில் இருக்கிற செல்வராஜுக்கு, அவர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது உடன் படித்த ஒரு ஆஸ்திரேலிய பெண் பெண்ணுடன் காதல் மலர்கிறது.
ஆனால் தனது சமூகத்தின், கிராமத்தின், பின்னணியில் இது சாத்தியமா ? எனும் கேள்வி வரும்போது அவருக்கு அது எளிதில் நடைபெறக் கூடிய ஒன்றாக தோன்றவில்லை. அதற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன்னாள் அவர்கள் சமூகத்தில் இதேபோல் ஒரு சூழ்நிலையை சந்திக்க நேர்ந்த இளங்கோவனின் காதலும் கல்யாணமும் தான்….
இளங்கோவன் – அவரும் மற்றொரு முசுகுந்த வெள்ளாளர் கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் . சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அவர் தனது சாதி இல்லாமல் வேறு சாதியைச் சேர்ந்த தமிழ் பெண்ணை காதலித்தார். இந்த செய்தி அரசல்புரசலாக கிராமத்திற்குள் கசிந்து விட்டது. சொல்லவும் வேண்டுமா ? ஏறக்குறைய எல்லா தமிழக கிராமங்களையும் போலவே இளங்கோவனின் கிராமமும் அவரைப் பற்றி பேச ஆரம்பித்தது. அவருக்கு பின்னால் குசுகுசுவென்று பேசி கிசுகிசுக்களை உருவாக்கி உருவாக்குவது. அவரை ஒரு குற்றவாளியாக உருவாக்கி அவமானப்படுத்துவது. அவரின் பெற்றோர்கள் தங்களது கட்டுக்கோப்பை மீறி விட்டதாக, பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை என்று குற்றம் சொல்வது, என பல்வேறு விதமான உணர்ச்சிகரமான எதிர்ப்புகளை அவர் சந்திக்க வேண்டியது இருந்தது. என்றாலும் வெளிநாட்டில் வேலை என்பதால் இளங்கோவன் அவைகளை பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் கிராமத்து பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எங்கே தங்கள் மகன் வேறொரு சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வானோ ? என்ற பயம் இருக்கத்தான் செய்தது.
வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த இளங்கோவனை, பாட்டி இறக்கும் நிலையில் இருக்கிறார் என்ற தகவல் சொல்லி வரவழைத்து, நாம் திரைப்படங்களில் பார்ப்பது போலவே உடனடியாக அவர்களது உறவின் முறையில் இருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய வலியுறுத்தினர். சூழலை அறிந்து கொண்ட இளங்கோவன் மீண்டும் சிங்கப்பூருக்கு தப்பி ஓடி விடுகிறார். ஆனாலும்கூட அவர்கள் பெற்றோர் அவமானம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டவும், இந்த தொடர் மன அழுத்தங்களால் ஊருக்கு மீண்டும் வருகிறார் இளங்கோவன் . வந்த அவர் பெற்றோர் பார்த்து வைத்திருந்த உறவினர் பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிகழ்வு ஏறக்குறைய அந்தப் பகுதிகளில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தது.
இந்தநிலையில் செல்வராஜூவோ சாதி, மொழி, இனம்,நாடு, எல்லாம் கடந்து ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை காதலிக்கிறார்.
என்னவாகும் அவரது நிலை?
அவரது குடும்பம் அதை ஏற்றுக் கொள்ளுமா ?
இந்த திருமணம் உண்டாக்கப் போகும் மாற்றங்கள் என்னென்ன ?
அடுத்த வாரம் சொல்கிறேன்…