ஃபைவ் ஸ்டோன்ஸ், சப்டே, பேப்பர் பால்ஸ், மார்பில்ஸ், லாங்காங் பிஷிங்…. என்னப்பா குழந்தையா இருக்கப்ப விளையாடுன விளையாட்டுகளோட பேரை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்கனு கேக்குறீங்களா… காரணம் இருக்கு. சிங்கப்பூரோட பிஸியான பொதுப்போக்குவரத்துகள்ல நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இதன்மூலம் உதவ புது முயற்சியை எடுத்திருக்காங்க.. என்ன முயற்சினு விளக்கமா பார்ப்போம் வாங்க…
சிங்கப்பூர் எம்.ஆர்.டி ஸ்டேஷன்கள்
சிங்கப்பூரில் மக்கள் அதிகம் பயன்படுத்துவது பொதுப்போக்குவரத்தைத்தான். அதிலும், குறிப்பாக மெட்ரோ ரயிலை தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆறு தனித்தனி வழித்தடங்கள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், ஒவ்வொரு வழித்தடமும் குறிப்பிட்ட நிறத்தால் அடையாளம் காணப்படுகிறது. அப்படியாக, 122 எம்.ஆர்.டி ஸ்டேஷன்களோடு 203 கிலோமீட்டர் நெட்வொர்க் என பரந்துவிரிந்தது. இந்தப் போக்குவரத்துதான் சிங்கப்பூர் மக்களின் வரப்பிரசாதம். சிங்கப்பூரின் எல்லா முக்கியமான இடங்களுக்கு அருகிலும் நிச்சயம் ஒரு எம்.ஆர்.டி ஸ்டேஷன் இருக்கும்.
அப்படி இல்லையென்றால், நீங்கள் குறிப்பிட்ட இடத்தை அடைய எம்.ஆர்.டி ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து பேருந்து, டாக்ஸி போன்ற சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் சிங்கப்பூர் மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கு எம்.ஆர்.டி ஸ்டேஷன்கள் ரொம்பவே முக்கியமானது.
மூத்த குடிமக்கள்
டிமென்ஷியா எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரின் மூத்த குடிமக்கள் இந்த டிரான்ஸ்போர்ட்டைப் பயன்படுத்த ரொம்பவே சிரமப்படுவார்கள். பிஸியான இந்தப் போக்குவரத்தை மற்றவர்கள் உதவியுடன் அவர்கள் பயன்படுத்துவது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட சூழலில்தான், அவர்களுக்கு உதவ புதிய முயற்சி கையிலெடுக்கப்பட்டிருக்கிறது. என்னன்னு கேக்குறீங்களா… இப்போ மேலே முதல் வரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சின்ன வயது விளையாட்டுகளை மீண்டும் ஒருமுறை வாசிச்சுப் பாருங்க.. அதை வைச்சு சீனியர் சிட்டிசன்களுக்கு உதவ முடிவு செஞ்சிருக்காங்க… எப்படினு பார்ப்போம் வாங்க..
டிமென்ஷியானு சொல்ற மறதி நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கவங்களுக்கு நீண்டகால மெமரி இருக்குமாம். அதேநேரம், சமீபகாலங்களில் அவர்கள் சந்தித்த புதிய விஷயங்கள் பெரும்பாலும் நினைவுல இருக்காதுனு சொல்றாங்க Dementia Singapore அமைப்பு. அந்த அமைப்பு SBS Transit-ஓட சேர்ந்து மூத்த குடிமக்களுக்காக எம்.ஆர்.டி ஸ்டேஷன்களில் வழிகாட்ட, Find your Way என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்காங்க.
எப்படி செயல்படுகிறது?
ஒவ்வொரு எம்.ஆர்.டி ஸ்டேஷனிலும் பஸ் இண்டர்சேஞ்ச் எனப்படும் பேருந்து போக்குவரத்துக்குச் செல்லும் பாதை குறிப்பிட்ட நிறத்தில் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. பொதுவாக, இதுபோன்ற ரயில் நிலையங்களில் இரைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்களால் உரிய முறையில் வழிகேட்டு தங்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்குப் போவது கடினமான விஷயம். ஒவ்வொரு முறையும் வழியைக் கேட்கும்போது, அதைச் சரியாக உள்வாங்கிக் கொள்வதிலும் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட முதியோருக்குப் பிரச்னை இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு விளையாட்டையும் ஒரு நிறத்தோடு ஒப்பிட்டு, அதன்மூலம் குறிப்பிட்ட நிறத்தைக் கொண்ட ரயில் போக்குவரத்தோடு ஒப்பிடுகிறார்கள். முதியோர்கள், தங்கள் சிறுவயது விளையாட்டை நினைவில் வைத்திருப்பார்கள் என்பதால், அதைக் கொண்டு எளிதாக வழியைக் கண்டுபிடித்துவிட முடியும். இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், வெளியில் தனியாக சுதந்திரமாக நடமாடுவதை விரும்ப மாட்டார்கள். தனியாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியை மறந்துவிடும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகம். இதனால், மற்ற குடும்ப உறுப்பினர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், பெரும்பாலும் வீடுகளில் தனிமையில் பொழுதைக் கழிக்க வேண்டிய சூழலுக்கு அவர்கள் ஆளாகிறார்கள்.
ஆனால், இந்தப் புதிய திட்டம் அப்படியான முதியோர்களுக்கு எளிதாக வழிகாட்டுகிறது. எவ்வளவு அதிகமாக வெளியில் நடமாடுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்களோடு அவர்கள் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இது அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நோயின் தன்மை மோசமடையாமல் பார்த்துக் கொள்ளும்’ என்கிறார் Dementia Singapore அமைப்பின் தலைமை செயலதிகாரி ஜேசன் ஃபூ. மேலும்,
அவர்கள் வெளியில் வர விரும்பினால், வழி மறந்துவிட வாய்ப்பிருக்கிறது. இதனால், மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் திட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சூழலுக்கு அஞ்சியே முதியோர்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகிறார்கள். இதனால், அவர்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு விஷயம் மூலம் அவர்களுக்கு உதவலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம்’ என்று புதிய திட்டத்தின் பின்னணியையும் அவர் விளக்குகிறார்.
`சமூகத்தோடு கலந்துரையாடுவது, ஒன்றியிருப்பது ரொம்பவே முக்கியமானது. பயணம் குறித்த அச்சம் உங்களுக்கு இருந்தால் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த நீங்கள் தயக்கம் கொள்வீர்கள். இதனால், வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டீர்கள். உங்களின் சூழலிலேயே நீங்கள் சிறைபட்டுக் கிடப்பீர்கள். இந்த முயற்சி என்னைப் போன்ற முதியோர்களுக்கும், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்’ என்கிறார் Dementia Alliance International என்கிற தனியார் தொண்டு நிறுவன அதிகாரியும் முதியவருமான ஓங்.
ஒவ்வொரு இடத்துக்கும் போகும் வழி பற்றிய அறிவிப்புகள், தரையில் பல்வேறு நிறங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சிறுவயது விளையாட்டுகள் பற்றிய குறிப்புகளும் குறிப்பிட்ட நிறங்களின் அடிப்படையில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டிருக்கும். இது முதியோருக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்யும். இதனால், எளிதாக வழி கண்டுபிடித்து முதியோர்கள் தங்கள் பயணத்தை எந்தவித சிரமமும் இன்றி மேற்கொள்ள முடியும்.
இதனால், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் முதியோர் தங்கள் விரும்பிய இடங்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகவே பயணம் மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக 5 எம்.ஆர்.டி ஸ்டேஷன்கள் மற்றும் 3 பஸ் இண்டர்சேஞ்ச் இடங்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது. முதியோர்கள் அதிகம் பயன்படுத்தும் ஸ்டேஷன்களாக இவை அடையாளம் காணப்பட்டிருப்பதால், இந்தத் திட்டம் அங்கிருந்து செயல்படுத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக, மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.