TamilSaaga

“200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்” – மியான்மார் நாட்டிற்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம்

மியான்மார் நாட்டின் பெருந்தொற்றுக்கு எதிரான அந்த நாட்டின் போராட்டத்திற்கு ஆதரவாக சிங்கப்பூர் 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அனுப்பும் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று புதன்கிழமை (ஜூலை 28) தெரிவித்துள்ளது. 10 லிட்டர் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்பப்படும், இது மியான்மர் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அளிக்கப்படும்.

மியான்மரில் இதுவரை 280,000 பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன, கடந்த மாதத்தில் மட்டும் 120,000க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நோய் தொடர்பான 7,800 க்கும் மேற்பட்ட இறப்புகள் மியான்மரில் நிகழ்ந்துள்ளன. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, ஜூன் மாதத்திலிருந்து நோய்த்தொற்றுகள் மியான்மரில் அதிகரித்துள்ளன.

பெருந்தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மியான்மர் மக்களுடன் சிங்கப்பூர் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பங்களிப்புகள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் மியான்மர் சமூகம், ஏற்பாடு செய்த நன்கொடைகள், இந்த பெருந்தொற்று அளித்த சவால்களை முறியடிப்பதில் சிங்கப்பூர் மற்றும் மியான்மர் மக்களிடையே வலுவான பரஸ்பர ஆதரவை உறுதிப்படுத்துகின்றன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் உள்ள சமூகங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் பொது வேண்டுகோளை விடுத்துள்ளது.

Related posts