சிங்கப்பூரில் தற்போதைய கோழி சப்ளை போதுமானதாக இருப்பதால் நுகர்வோர் சிக்கனைக் வாங்கி குவிக்க அவசியமில்லை என்றும், மேலும் விரைவில் அதிக கையிருப்பு வரும் என்று நேற்று வியாழன் (மே 26) மாநில நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டெஸ்மண்ட் டான் தெரிவித்தார்.
வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் கோழி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக மலேசியா கடந்த திங்களன்று அறிவித்த நிலையில், Upper Thomson சாலையில் உள்ள NTUC Fairpriceன் புதிய உணவு விநியோக மையத்தைப் பார்வையிட்ட பிறகு, இந்த கருத்தை அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உட்கொள்ளப்படும் கோழிகளில் மூன்றில் ஒரு பங்கு மலேசியாவில் இருந்து வருகிறது, அவற்றில் பெரும்பாலானவை உயிருடன் அனுப்பப்பட்டு இங்கு வெட்டப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் கோழி இறக்குமதியில் சுமார் 70 சதவீதம் “பற்பல நாடுகளில்” இருந்து பெறப்படுகிறது என்றும் திரு. டான் குறிப்பிட்டார். கூடுதலாக, இறக்குமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஏற்கனவே கூடுதலாக கோழிகளை ஆர்டர் செய்துள்ளனர் என்பதால், இன்னும் சில வாரங்களில் அவை இங்கு வந்து சேரும் என்றும் அவர் கூறினார்.
அதே போல இதுபோன்ற சிக்கலான நேரத்தில் “அதிகமாக இறைச்சிகளை வாங்குதல் அல்லது அதை பதுக்கி வைப்பது”, தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் திரு. டான் விளக்கினார். உறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி மற்றும் கடல் உணவுகள் உட்பட புரதத்தின் பிற வடிவங்களுக்கு மாறுவதைக் கருத்தில் கொள்ளுமாறும் பொதுமக்களை அவர் ஊக்குவித்தார்.
மேலும் “கோழியை மட்டுமே வழங்கக்கூடிய சில வணிகங்கள் இருந்தால், நிச்சயமாக, அவர்களின் வணிகங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், அந்த காலகட்டத்தை கடக்க அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதை குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.