சிங்கப்பூரில் தீவின் கடற்கரையை புத்துயிர் பெற வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 11) புலாவ் உபின் பகுதியில் கடலோர மரங்களை நட்டு வளர்ப்பதற்கான புதிய நர்சரி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடலோர Arboretum (மரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தாவரவியல் பூங்கா) சுமார் 70 பூர்வீக இனங்களில் இருந்து பெறப்பட்ட சுமார் 500 மரங்களை காட்சிப்படுத்தும்.
அவற்றில் ஆபத்தான நிலையில் உள்ள அழிந்து வரும் கடல் டிரிஸ்டானியா மற்றும் டமாக்-டமக் தஹூன் ஆகிய மரங்கள் அடங்கும். அவை சிங்கப்பூரில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது, மேலும் கடந்த 2014ல் கோனி தீவில் அவை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆர்போரேட்டத்தில் உள்ள தாவரங்கள் பின்னர் புலாவ் உபின் கடற்கரையில் மீண்டும் வாழ்விட மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்படும்.
இது சிங்கப்பூர் நிலப்பரப்பில் உள்ள மற்ற வாழ்விட மேம்பாட்டு திட்டங்களுக்கு துணை செய்யும் என்று தேசிய பூங்கா வாரியம் (NParks) தெரிவித்துள்ளது. “கோனி தீவு பூங்கா போன்ற பூங்காக்களில் கடலோர பூர்வீக தாவரங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. புல ஆய்வுகளுக்கான 5.3 ஹெக்டர் வசதியான உபின் லிவிங் லேபில் அமைந்துள்ள இந்த புதிய ஆர்போரேட்டம் புலாவ் உபினின் பல்லுயிரியலைப் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்புமிக்க குறிப்பு ஆதாரமாக விளங்கும் என்று NParks தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் கல்வித் திட்டங்களை செயல்படுத்த NParks பல்வேறு பள்ளி அல்லது ஆர்வக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் என்றும் அது கூறியது.