TamilSaaga

அதிகரித்த தொற்று.. சிங்கப்பூர் “சைனாடவுன்” மூடல் : ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை

சிங்கப்பூரில் பிரபல சைனாடவுன் வளாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) மாலை 3 மணி முதல் புதன்கிழமை இரவு 11.59 மணி வரை அனைத்து பொதுமக்களுக்கும் மூடப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. மொத்தம் 66 பெருந்தொற்று வழக்குகள் அங்குள்ள கிளஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 11) மொத்தம் 555 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் சமூகத்தில் 486 பேர் மற்றும் 64 தங்குமிட வாசிகள் உள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த ஐந்து பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. சைனாடவுன் காம்ப்ளக்ஸ் கிளஸ்டருடன் இணைக்கப்பட்ட 66 வழக்குகளில், 63 பேர் அங்கு வேலை செய்பவர்கள் ஆவர். அவர்களில் 58 பேர் ஸ்டால் வைத்திருப்பவர்கள் மற்றும் ஸ்டால் உதவியாளர்கள், நான்கு கிளீனர்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் அடங்குவர். மீதமுள்ள மூன்று பேர் வீட்டுத் தொடர்புகள் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள்.

இதனையடுத்து முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக சைனா டவுன் வளாகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது என்று MOH கூறியுள்ளது. மேலும் கிளஸ்டரை விரைவாகக் கட்டுப்படுத்த, செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 11 வரை சைன்டவுன் வளாகத்திற்கு Safe Entry மூலம் உள்நுழைந்தவர்களுக்கு “சுகாதார ஆபத்து” எச்சரிக்கைகள் வழங்கப்படும்.

மேலும் அவர்கள் விரைவில் (PCR) சோதனைக்கு செல்லவும், மற்றும் 14 நாட்களுக்கு அவர்களின் சமூக தொடர்புகளை குறைக்கவும் கடுமையாக ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் MOH கூறியுள்ளது. செப்டம்பர் 8 மற்றும் செப்டம்பர் 11க்கு இடையில் சைனாடவுன் வளாகத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு இலவச கோவிட் -19 பரிசோதனையை அமைச்சகம் உருவாகியுள்ளது.

Related posts