சிங்கப்பூரில் கடந்த ஆண்டு தனது வீட்டுப் பணியாளரை கொடுமைப்படுத்தி கொடூரமாக கொன்றதற்காக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் தண்டனைக்கான மேல்முறையீட்டு மனுவை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (ஜூன் 29) அன்று தள்ளுபடி செய்தது.
தனது வீட்டுப் பணிப்பெண்ணான மியான்மார் நாட்டை சேர்ந்த பியாங் நங்கை டோன் என்பவரை மோசமாக நடத்தியதை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த காயத்திரி முருகையன், உயர் நீதிமன்ற நீதிபதி இவரது வழக்கை “மிகவும் மோசமான குற்றவியல் கொலை வழக்குகளில் ஒன்று” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குற்றவாளி காயத்திரி தனது 30 ஆண்டுகால சிறைத் தண்டனையை 12 முதல் 15 ஆண்டுகள் வரை குறைக்க முயன்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
42 வயதான காயத்திரி, ஏற்கனவே தனக்குள்ள மனநலக் கோளாறு மேலும் அளவுக்கதிகமான துன்பத்தை தனக்கு சிறைவாசத்தின்போது ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் நீதித்துறையிடம் கருணைக்காக மன்றாடினார்.
ஆனால் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது, உயர் நீதிமன்ற நீதிபதி சீ கீ ஊன் ஏற்கனவே அவருக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டுகால தண்டனையை உறுதி செய்தது.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த 24 வயதான செல்வி. பியாங் நகாய் டோன், 14 மாதங்கள் தொடர்ச்சியான கொடுமைகளை அனுபவித்த பிறகு, ஜூலை 26, 2016 அன்று தனது கழுத்தில் கடுமையான காயம் மற்றும் மூளையில் ஏற்பட்ட காயத்தால் அவர் இறந்தார்.