TamilSaaga

தமிழ்நாட்டிற்குள் அதிரடியாக களமிறங்கும் சிங்கப்பூர்…”பிளான் 5 எக்ஸ்” என்ற சிறப்பு திட்டம் அறிவிப்பு!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஜனவரி 2024 ஆம் ஆண்டு நடக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு பங்கேற்பதற்காக சிங்கப்பூர் அரசானது தற்பொழுது கோரிக்கை விடுத்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் முதலிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழர்களிடம் சிறப்புரையாற்றினார். ஜனவரி 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாட்டு மக்களையும், முக்கியமாக நமது அண்டை நாடுகளை அழைப்பதன் நோக்கத்தில் அந்த சுற்றுப்பயணமானது அமைந்தது.

வெளிநாட்டு முதலீடுகளை, தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்காக இந்த சுற்றுப்பயணம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் அந்த சுற்றுப்பயணத்திற்கான பலன் தற்பொழுது கிடைத்துள்ளதாகவே தெரிகின்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்ற பொழுது அங்கிருக்கும் அரசியல் பிரமுகர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அங்கே வசிக்கும் சில தமிழர்கள் ஆகியோரை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேம்பாட்டு திட்டங்கள், தமிழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டங்கள், செருப்பு மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் தொடர்பான தொழில்கள், விண்வெளி தொடர்பான திட்டங்கள், ஜவுளிகள் மற்றும் ஆடைகள் தொடர்பான திட்டங்கள் போன்ற நாட்டின் நிதி நிலைமையை உயர்த்துவதற்காக பல வகை திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டினை மிகவும் சிறப்பாக நடத்துவதற்காக மூன்று லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு பங்கேற்பதற்காக சிங்கப்பூர் அரசு தற்பொழுது கோரிக்கை விடுத்துள்ளது என்ற மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. மேலும் இந்த மாநாட்டில் பதிவு செய்த முதல் வெளிநாடு என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சிங்கப்பூரின் முதலீடுகளை அதிகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ப்ளான் எக்ஸ்(X) எனப்படும் திட்டத்தினை சிங்கப்பூர் அரசு தமிழ்நாட்டில் புகுத்த உள்ளது. அதாவது ஏற்கனவே செய்த முதலீடுகளை விட ஐந்து மடங்கு அதிக முதலீடு செய்ய முன்வந்துள்ளது இந்த ஐந்து எக்ஸ் என்பதின் அர்த்தம் ஆகும்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு கிடைத்துள்ள பலனாகவே இதனை பார்க்கின்றனர். கொரோனா நோய் தொற்று பிறகு அனைத்து மாநிலங்களும் பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்களை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் பக்கம் முதலீடுகள் குவிந்து வருவது ஒரு நேர்மறையான அறிகுறி ஆகும்.

குறிப்பாக சொல்லப்போனால் 2022ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் 46 சதவீதம் ஸ்கூட்டர்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

இந்நிலையில் முதலீட்டாளர் மாநாடு, வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தின் பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு பெரும் முயற்சியாகும். இந்த மாபெரும் முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அது சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Related posts