இந்த பெருந்தொற்று காலத்தில் பிற நாடுகளில் இருந்து தமிழகத்திக்கும் இன்னும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விமான சேவை என்பது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இரு மார்க்கமாக கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் திரு. வைகோ அவர்கள் விமான போக்குவரத்துக்கு துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அண்டை நாடான இந்தியாவின் பல பகுதிகளுக்கு தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சிங்கப்பூரில் இருந்து அனுதினம் சென்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை Air bubble மற்றும் வந்தே பாரத் சேவைகளை தவிர பிற பன்னாட்டு விமான சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெகு சில நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவையை அளித்து வருகின்றது இந்தியா.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் முதல் தமிழகத்தின் திருச்சிக்கு மற்றும் தலைநகர் சென்னைக்கு செல்ல விமானங்கள் இல்லாமல் பெரிய அளவில் மக்கள் தவித்து வந்தனர். திருச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட பல இந்திய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டாலும் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விடுகின்றன. இதனால் மக்கள் குறித்த நேரத்தில் தங்களுடைய அவசர தேவைக்காக சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று பலரும் இரு நாட்டு அரசிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சில கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டாலும் அந்த டிக்கெட்களும் சில மணி நேரத்தில் தீர்ந்து விடுகின்றன. ஆகையால் இந்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பயணிகளுக்கு உதவ வேண்டும் என்று திரு. வைகோ அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.