சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் Chip-Maker நிறுவனமான “மைக்ரான் டெக்னாலஜி” அதன் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த வரும் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் உற்பத்தி பொறியாளர்களை இங்கு பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் உட்லண்ட்ஸ் வசதியை விரிவுபடுத்தியதில் இருந்து, அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் சிங்கப்பூரில் 1,500 ஊழியர்களுக்கு கூடுதலாக பணியமர்த்தியுள்ளது என்று இந்நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளின் நிர்வாக துணைத் தலைவர் மணீஷ் பாட்டியா கூறினார்.
உலக அளவில் அந்த நிருவனத்தின் உற்பத்தி மற்றும் ஆய்வு மேம்பாட்டுப் பிரிவுகளை எதிர்வரும் 10 ஆண்டுகளில் வலுவானதாக மாற்றுவதற்காக சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலரை இந்த நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக நாடுகளை மதிப்பிட்டு பார்க்கும்போது சில்லுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் இந்த நிருவனத்தின் கீழ் சுமார் 7500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் அரசுடன் இணைந்து தங்கள் நிறுவனத்தின் ஆய்வு மேம்பாட்டு ஆற்றல்களை அதிகரிப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்று திரு பாட்டியா தெரிவித்தார்.