தமிழ் வம்சாவளியை சேர்ந்த பலர் சிங்கப்பூரில் இன்றளவும் உயர் பதவிகளில் இருப்பதை நாம் அறிவோம். அந்த வகையில் சிங்கப்பூரில் நீண்ட காலம் அதிபராக இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தான் நமது சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்ற செல்லப்பன் ராமநாதன்.
சிங்கப்பூரின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் நீங்காத இடம்பிடித்தவர் இவர். மலேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூரின் தூதராகவும் பணிபுரிந்த நாதன் 1999ம் ஆண்டு முதல் முறையாக போட்டியின்றி சிங்கப்பூரின் அதிபராக பதவியேற்றார்.
அதன் பிறகு 2011ம் ஆண்டு வரை இருமுறை அவர் நமது சிங்கை மண்ணுக்கு அதிபராக இருந்தார். சிங்கப்பூர் வரலாற்றில் அதிக காலம் சுமார் 12 ஆண்டுகள் பதவியில் இருந்த பெருமைக்குரியவர் இவர். மூன்றாவது முறையாக சிங்கப்பூர் அதிபராக வாய்ப்பு இருந்தும், வயது முதிர்வு காரணமாக அதனை ஏற்க மறுத்து, அதிபர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். கடந்த 2013ம் ஆண்டு சிங்கப்பூரின் உயரிய ”ஆர்டர் ஆஃப் டெமாஸெக்” விருது எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கப்பட்டது.
எனினும், 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நம்மை விட்டு மறைந்த அய்யா நாதன் அவர்கள், அதற்கு முன்பு சில காலங்கள் கடுமையாக நோய்வாய்பட்டிருந்த நிலையில் சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இறுதியாக 22 ஆகஸ்ட் 2016ல் அவர் காலமானார், அப்போது பல நாட்டு அரசியல் தலைவர்கள் அவருடைய மறைவில் பங்கேற்றனர்.
தனது வாழ்நாளில் அவர் ரசித்த பல தமிழ் பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர் சேரன் அவர்களின் இயக்கத்தில் வெளியான “பொற்காலம்” என்ற படத்தில் வந்த “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” என்ற பாடல் தான் அப்போது சிங்கை முழுவதும் நாதன் அவர்களின் மறைவின்போது ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை குறித்து பல முறை அவர் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உரையாடியுள்ளார் என்று ம்கூறப்படுகிறது. இந்த பாடலை பாடிய கிருஷ்ணராஜ் என்ற பாடகர் மற்றும் இசையமைத்த தேனிசை தென்றல் தேவா ஆகியோரையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் அவர்.
தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலில், தமிழகத்தில் உள்ள பல ஊர்களை பற்றிய குறிப்பும் அதன் பெருமையையும் குறிப்பிட்டிருப்பர் கவிப்பேரரசு. அதில் என்னுடைய மூதாதையர்கள் எங்கு பிறந்திருப்பார்கள்? நான் தமிழ் நாட்டில் எந்த ஊரை சேர்ந்தவன் என்று தினமும் அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் யோசிப்பாராம் நாதன் அவர்கள். ஆனால் இறுதி வரை தமிழகத்தில் தான் எங்கு பிறந்தேன் என்பதை அறியாமலே இந்த மண்ணை விட்டு சென்றுள்ளார் நம் மண்ணின் மைந்தர்.
அவரது பூர்வீகம் தஞ்சாவூர் என்று கூறப்பட்டாலும், அதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. சிலர் அவரது பூர்வீகம் இலங்கை என்றும் கூறுகின்றனர்.
உலகில் நாம் எந்த மூலையில் பிறந்து வளர்ந்தாலும் தமிழன் என்கிற அந்த ஒரு பெருமை நம்மை ஆட்கொள்ள மறக்காது என்பதற்கு அய்யா எஸ்.ஆர்.நாதன் ஒரு மிகப்பெரிய சாட்சி.