TamilSaaga

“இதுபோன்ற செயல்களை சிங்கப்பூர் போலீஸ் துறை சகித்துக்கொள்ளாது” : 58 வயது நபர் Coffee கடையில் கைது

சிங்கப்பூரில் க்ளெமெண்டி அவென்யூ 1-ல் உள்ள ஒரு காபி கடையில் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) மாலை கத்தியை வைத்திருந்ததாக கூறி 58 வயது நபர் கைது செய்யப்பட்டார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.10 மணியளவில் போலீசாருக்கு ஒரு உதவி குறித்து அழைப்பு வந்தது என்று சிங்கப்பூர் போலீஸ் படை இந்து சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தது.

போலீசார் அந்த இடத்திற்கு வந்தவுடன், க்ளெமென்டி போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 58 வயதான நபரின் அடையாளத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த நபர் மீது பொது இடத்தில் தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்ததாக இன்று சனிக்கிழமை அன்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது 6 பிரம்படியும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 58 வயது நபர் அந்த கத்தியை கொண்டு யாரையும் மிரட்டினாரா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

“இதுபோன்ற வெட்கக்கேடான செயல்களுக்கு காவல்துறையிடம் சகிப்புத்தன்மை இல்லை, மேலும் சட்டத்தை அப்பட்டமாக புறக்கணிப்பவர்களுக்கு எதிராக செயல்பட சிங்கப்பூர் போலீஸ் படை தயங்காது” என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

Related posts