சிங்கப்பூரில் ஜனனி கலைச்செல்வம் என்ற 24 வயது பெண்மணி இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 16) அன்று கோவிட் -19 சட்டங்களை மீறியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதேபோல அவர் மீது சுமத்தப்பட்ட மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் அக்டோபர் 5ம் தேதி தீர்ப்புக்கு பரிசீலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனனி, இந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி மாலை யிஷுன் ரிங் சாலையில் உள்ள OneDoctors குடும்ப மருத்துவமனைக்கு ஜனனி சென்றதாக நீதிமன்றம் கேள்விப்பட்டது. அவர் தொண்டை புண், இருமல் மற்றும் சில நாட்களாக மூச்சுத் திணறல் இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அந்த நேரத்தில் குறிப்பிட்ட அந்த மருத்துவமனை ஸ்வாப் மாதிரிகளைச் சேகரிப்பதை நிறுத்தியதால், ஜனனிக்கு பிப்ரவரி 1 காலை கோவிட் -19 சோதனைக்காகத் மீண்டும் வருமாறு கூறியுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த இடத்திலேயே டெஸ்ட் எடுத்த நோயாளிகளுக்கு வழக்கமாக மூன்று நாள் மருத்துவ சான்றிதழ் (MC) வழங்குவார் என்று மருத்துவர் விளக்கினார். ஆனால் அவர் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வரவிருப்பதால், அவர் ஜனனிக்கு ஐந்து நாள் MC வழங்கியுள்ளார். சிகிச்சைக்காக கிளினிக்கிற்குச் செல்வதைத் தவிர, விடுப்பு காலத்தில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஜனனி தனது நண்பரின் வீட்டுக்கு டாக்ஸியில் இரவு உணவருந்தச் சென்று அதிகாலை 3.50 மணி வரை அங்கேயே இருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிப்ரவரி 1ம் தேதி, அவர் தனது ஸ்வாப் சோதனையை தவிர்த்து, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் தனது நேரத்தை செலவிட்டுள்ளார். இரவு 7.50 மணியளவில் தனது காதலனின் வீட்டுக்கு டாக்ஸியில் செல்வதற்கு முன்பு அவர் நோர்த்பாயிண்ட் சிட்டிக்கு ஷாப்பிங் சென்றுள்ளார்.
ஜனனிக்கு நடந்த சோதனையில் பெருந்தொற்று இல்லை என்பது உறுதியானாலும் கோவிட் -19 சட்டங்களை மீறிய குற்றவாளிகளுக்கு அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.