TamilSaaga

லட்சக்கணக்கில் பணத்தை கட்டி சிங்கப்பூரில் நீங்கள் வேலைக்கு சேர்ந்த கம்பெனி சரியில்லை என்றால் அடுத்தது செய்ய வேண்டியது என்ன?

பொதுவாகவே இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரவேண்டும் என்ற கனவுடன் வரும் இளைஞர்கள் ஏஜென்டிடம் பல லட்சக்கணக்கான பணத்தினை கடன் வாங்கி கட்டி தான் இங்கு வருகின்றார்கள். பணத்தை ஒரு வருடத்துக்குள் சம்பாதித்து விட்டால் அடுத்து வருகின்ற பணத்தை மிச்சப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கணவுடன் இங்கு வருபவர்களே அதிகம். அப்படி இங்கு வேலைக்கு வருபவர்கள் எல்லாருக்கும் நினைத்த மாதிரி கம்பெனி மட்டும் சம்பளம் அமைக்கின்றதா என்றால் பாதிக்கு மேல் உள்ள தொழிலாளிகளிடம் இருந்து வரும் பதில் இல்லை என்பதே ஆகும்.

ஏனென்றால் ஏஜென்ட் சொன்னது ஒரு வேலையாக இருக்கும் இங்கு வந்து கம்பெனியில் கொடுப்பது ஒரு வேலையாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கு வந்து விழி பிதுங்கி நிற்கும் தொழிலாளர்கள் ஏராளம். அப்படி என்றால் நாம் முன்கூட்டியே என்ன செய்ய வேண்டும் என்று தானே கேட்கின்றீர்கள்? அதற்கு ஒரே பதில் சிங்கப்பூர் வருவதற்கு முன்னாலேயே உங்களிடம் IP copy ஒன்று கொடுக்கப்படும். உங்கள் ஏஜென்ட் இடம் இருந்து நீங்கள் ஐபியை பெறும் பொழுது உங்களது வேலை என்ன சம்பளம் என்ன என்பது தெளிவாக அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.

அவசரப்பட்டு வேலைக்கு வராமல் உங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் மட்டும் வேலைக்கு வாருங்கள். இல்லையென்றால் சரியான வாய்ப்பு வரும் வரை காத்திருந்து உங்களுக்கான வேலையை தேர்ந்தெடுங்கள். நீங்கள் வந்த பின்பு தான் விஷயம் தெரிகிறது என்றால் என்ன பண்ண வேண்டும் என்று தானே கேட்கின்றீர்கள்? சிங்கப்பூரை பொறுத்தவரை உடனடியாக ஒரு வேலையை விட்டு இன்னொரு வேலைக்கு இந்தியா போன்று நீங்கள் மாற முடியாது. ஏனென்றால் உங்களை வேலைக்கு எடுப்பதற்கு உங்களது முதலாளி அரசாங்கத்திற்கு பணம் கட்டியிருப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் வேலையை வேண்டாம் என்று சொன்னால் உங்களுக்கு ஏஜென்டிடம் கட்டிய பணம் நஷ்டம், முதலாளிக்கும் நஷ்டம்.

எனவே வேலைக்குச் சேர்ந்த முதல் மூன்று காலமானது உங்களுக்கான பரிசோதனை காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் உங்களது வேலையில் எந்த பிரச்சினை இருந்தாலும் நீங்கள் ஏஜென்டிடம் தாராளமாக சொல்லி அதை தீர்க்கச் சொல்லலாம். அப்படி ஏஜெண்டும் செவி சாய்க்கவில்லை என்றால் நீங்கள் கம்பெனியின் ஹெச் ஆர் அல்லது நிர்வாகப் பொறுப்பில் இருப்பவரை நேரடியாக அணுகி உங்களது குறையை சொல்லலாம். அப்படியும் உங்களது பிரச்சனை தீர்க்க முடியாத பட்சத்தில் பொறுமை தான் ஒரே தீர்வு. குறைந்தபட்சம் அந்த கம்பெனியில் ஒரு வருடமாவது வேலை செய்துவிட்டு நீங்கள் ஏஜென்டிடம் கட்டிய பணத்தை மீட்டபின் நல்ல கம்பெனியாக வரும் வரை காத்திருந்து வேலைக்கு செல்வதே சிறந்தது.

Related posts