சிங்கப்பூரில் வேலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியடைந்து, தனது நிறுவனத்தின் கவனத்தை ஈர்க்க விரும்பி, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான லாரியின் இன்ஜின் ஆயில் பெட்டியில் மண்ணை போட்டுள்ளார் ஒரு தொழிலாளி. இதனால் அந்த நிறுவனத்திற்கு அந்த லாரியை பழுதுபார்க்க S$24,931 செலவாகியுள்ளது. இந்நிலையல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீனி பரமசிவம் என்ற 40 வயது தொழிலாளிக்கு இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) 12 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சீனி பரமசிவம் என்ற அந்த தொழிலாளி ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புக்கான டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவர் சுங்கே கடுட்டில் உள்ள நிறுவனத்தின் தங்குமிடத்தில் தங்கியிருந்தார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அந்த நிறுவனத்தில் வேலைபார்த்த அவருக்கு மாத அடிப்படை சம்பளமாக S$465 வழங்கப்பட்டுள்ளது. மேலும் OT, Allowances மற்றும் பிற விலக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு அவருக்கு மாத சம்பளமாக S$1,000 வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் 2020ல், சீனி தனது நிறுவனத்துடன் வேலை தொடர்பான தகராறில் சிக்கியுள்ளார். ஆனால் அது எந்தவிதமான பிரச்சனை என்று நீதிமன்ற ஆவணங்களில் வெளிப்படுத்தப்படவில்லை. மார்ச் 21, 2020 அன்று அதிகாலை 2 மணியளவில், சீனி தனது தங்கும் அறையில் மது அருந்தியுள்ளார். அந்த நேரத்தில் விரக்தியடைந்து, நிறுவனம் தனது பேச்சைக் கேட்கவில்லை என்று நினைத்து, “நிறுவனத்தின் கவனத்தைப் பெற ஏதாவது செய்ய வேண்டும்” என்று அவர் முடிவு செய்தார் என்று வழக்கறிஞர் கூறினார்.
அதிகாலை சுமார் 3 மணியளவில், விடுதி கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கம்பெனி லாரியை நோக்கி நடந்த அவர், என்ஜின் பெட்டியைத் திறந்து அதில் கொஞ்சம் மண்ணைக் கொட்டியுள்ளார். அனுபவம் வாய்ந்த ஓட்டுநரான சீனி தனது செயல்கள் லாரியை சேதப்படுத்தும் என்பதை அறிந்திருந்தார். ஆனால் லாரியின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. இந்நிலையில் மறுநாள் காலை வாகனத்தின் எஞ்சினில் இருந்து புகை வருவதாக லாரியின் நியமிக்கப்பட்ட டிரைவர் தெரிவித்தார். லாரி பழுதுபார்க்கும் இடத்திற்கு சென்றபோது குற்றம் அம்பலனமானது.
சீனி குற்றம் நடந்த நேரத்தில் அந்த லாரியை நோக்கி நடந்து சென்ற CCTV காட்சிகளின் மூலம் சிக்கினார். இந்த குற்றத்திற்காக அவர் சம்பளப் பிடித்தம் மூலம் S$254.90ஐ திருப்பிச் செலுத்தியுள்ளார்.