நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 8)சிங்கப்பூரின் ICA வெளியிட்ட ஒரு செய்தி வெளியீட்டில், பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் தங்கள் தனிப்பட்ட மொபைல் சாதனங்கள் மற்றும் மடிக்கணினியின் மூலம் இனி டிஜிட்டல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இதன் பொருள் என்னவென்றால், இனி மருத்துவமனைகள் மற்றும் ICA கட்டிடம் போன்ற இடங்களில் உள்ள பிறப்பு பதிவு சேவைகள் மற்றும் இறப்பு பதிவு சேவைகளை வழங்கும் கவுண்டர்கள் இனி இருக்காது என்பது தான்.
டிஜிட்டல் சான்றிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தை பிறந்த 42 நாட்களுக்குள் LifeSG செயலி மூலம் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாக பதிவுசெய்ததும், ICAன் இணையதளத்தில் தங்கள் குழந்தையின் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய பெற்றோருக்கு அறிவிக்கப்படும்.
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய பெற்றோருக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும், அதேபோல அந்த சான்றிதழைகளை அவர்களின் தனிப்பட்ட சாதனங்களில் சேமித்தும் வைக்க முடியும்.
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு S$18 கட்டணம் வசூலிக்கப்படும், இது தகவல் தொழில்நுட்ப அமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு உட்பட பதிவு செயல்முறையின் செலவை உள்ளடக்கியது என்று ICA தெரிவித்துள்ளது.
அதேபோல மே 29 முதல், இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் மரணத்தைப் பதிவு செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் மருத்துவப் பயிற்சியாளர் குறிப்பிட்ட நபரின் இறப்பைச் சான்றளித்தவுடன் இது தானாகவே ICA அமைப்பில் பதிவேற்றப்படும்.
சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வதற்கு 30 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும், அதை அவர்களின் தனிப்பட்ட சாதனங்களில் சேமிக்க முடியும்.