TamilSaaga

மன்னார்குடியின் மண் வீடுகளை மாடி வீடுகளாக்கிய “சிங்கப்பூர் தந்தை” லீ குவான் யூ! தமிழர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த “வாக்குறுதி”.. மன்னார்குடிக்கே பெருமை!

சிங்கப்பூர் வந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ அவர்களுக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், இந்த அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? அது ஏன் மன்னார்குடியில் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்? என்று ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

சிங்கப்பூரில் இருந்து சுமார் 6000 கி.மீட்டருக்கும் மேல் தொலைவுள்ள ஒரு ஊர், ஒரு தனி மனிதரின் ஆதரவால், ஒத்துழைப்பால், நல்ல எண்ணத்தால் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அது மன்னார்குடி தான்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரின் மிக முக்கிய பகுதி இந்த மன்னார்குடி. விவசாயமே அங்கு பிரதானம். திருவாரூரின் “ரைட் ஹேண்ட்” என்று கூட சொல்லலாம். ஆனால், தொழில்துறை வளர்ச்சி என்பது மிக மிகக் குறைவு.

என்னதான் விவசாயம் மனிதனின் அத்தியாவசியம் என்றாலும், குடும்பங்களின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்ல அது மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. போதாதகுறைக்கு அவ்வப்போது புயல் வந்து மோசமான சுவடுகளை பதியவிட்டு சென்றுவிடுகிறது. ‘கஜா’ புயல் ஏற்படுத்திய ரணம் இன்னமும் அப்பகுதி மக்களிடையே இருந்து இன்னமும் மறையவில்லை. மன்னார்குடி பகுதி இளைஞர்கள் இதனை நன்கு உணர்ந்திருந்தனர்.

இங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பாச்சிக் கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப் பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, நெடுவாக் கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட பல கிராமங்களில் வீட்டுக்கு ஒருவர் நிச்சயம் சிங்கப்பூரில் இருப்பார்கள். இந்த “மன்னை” கிராமங்களில் இருந்து சிங்கப்பூர் மண்ணை மிதிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

கட்டுமானத் தொழிலாளர், துறைமுகப் பணியாளர், வணிக நிறுவனங்களில் விற்பனையாளர், கோயில் பணியாளர் என சாதாரண வேலைகளில் இருந்து சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் வரை ரகம் ரகமாக இளைஞர்களை இந்த கிராமங்கள் சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளன. அதுமட்டுமின்றி, ஏராளமானோர் நிரந்தர குடியுரிமை (PR) பெற்று சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, சிங்கப்பூருக்கும் மன்னார்குடிக்கும் இடையே கல்யாணத்துக்கு பெண் எடுப்பது, கொடுப்பது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறுவதை நாம் அடிக்கடி காண முடியும்.

சிங்கப்பூரின் பொருளாதாரத் துறைகளில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் மன்னார்குடியில் அதிர்வலைகளை, தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மன்னார்குடி பகுதியில் இன்று நடக்கும் பல வணிக நடவடிக்கைகளுக்கு தேவையான முதலீடு சிங்கப்பூரில் இருந்தே கிடைத்திருக்கிறது. சிங்கையின் டாலர் மதிப்பு உயர உயர, மன்னையின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது.

இப்படி தமிழ் மக்களை வாஞ்சையோடு ஏந்திக் கொண்ட சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ 2015ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானபோது, சிங்கப்பூரில் எந்த அளவுக்கு துக்கம் இருந்ததோ, அதற்கு சற்றும் குறையாமல் மன்னார்குடியில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரசேனன் கூறுகையில், “அண்ணா, எம்.ஜி.ஆர் உயிரிழந்த போது ஏற்பட்ட அதே துக்க உணர்வு, லீ அவர்களின் மறைவால் மன்னார்குடி மக்களிடையே ஏற்பட்டது. இந்த பகுதிகளில் மாடி வீடும், வறுமை இல்லாத வாழ்க்கையும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாய்த்திருக்கிறது என்றால், அது சிங்கப்பூர் சென்று உழைத்ததால் தான்” என்கிறார்.

2015ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி மன்னார்குடி நகரில் நடந்த லீ குவான் அவர்களின் இரங்கல் ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அந்த ஊர்வலத்தின் இறுதியில் அவரது நினைவாக மன்னார்குடியில் மணிமண்டபம் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அந்த மணிமண்டபம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. மேலத்திருப் பாலக்குடி ஆர்.ரவீந்திரன், திருமக்கோட்டை எஸ்.ரஞ்சித்குமார், மேலநத்தம் எஸ்.பாண்டி மற்றும் சுந்தரக்கோட்டையைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.துரை ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெறுவதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

அந்த மணிமண்டபம் கட்டும் திட்டம் குறித்து, அந்த குழுவினர் பேட்டி கூட அளித்திருந்தனர். இதுகுறித்து தி ஹிந்து தமிழ் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், “குறைந்தபட்சம் 10 ஆயிரம் சதுர அடி முதல் அதிகபட்சம் 1 ஏக்கர் வரை இந்தப் பணிக்காக நிலம் தேடி வருகிறோம். இன்னும் ஒரு மாதத்துக்குள் இதற்காக ஒரு அறக்கட்டளையை அமைத்து பதிவு செய்ய உள்ளோம். அந்த அறக்கட்டளையில் 100 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் தலா ரூ.1 லட்சம் பங்குத் தொகையாக செலுத்துவர். உறுப்பினர்களில் இருந்து 10 பேர் அறக்கட்டளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர்.

மணிமண்டபத்தில் சிங்கப்பூர் மற்றும் லீ குவான் யூ வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி நிறுவப்படும். சிங்கப்பூர் முன்னேற்றத்தில் தமிழர்களின் பங்கு மற்றும் மன்னார்குடி பகுதி மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை குறித்த காட்சிப் படங்களும் இடம் பெறும். சிங்கப்பூர் வளர்ச்சியின் மூலம் நமது இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து குறும்படங்கள் தயாரிக்கப்படும்” என்று கூறியிருந்தனர்.

ஆனால், இதுவரை மன்னார்குடியில் லீ குவானுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து சிங்கப்பூரில் பணிபுரிந்த சிலர், மன்னார்குடி நகரின் சில இடங்களில் ‘இன்னும் ஏன் மணிமண்டபம் எழுப்பவில்லை?’ என்று கேள்வி எழுப்பி போஸ்டர்கள் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நூற்றுக்கணக்கான தமிழர்கள் முன்னிலையில், மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

மன்னார்குடி நகரின் பெரும் வளர்ச்சிக்கு சிங்கப்பூரும், தந்தை லீ குவான் யூ-வும் காரணமாக இருந்ததை இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் வரலாறு பேசும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts