சிங்கப்பூரில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் சராசரியாக 5.6 சதவீதம் அதிகரிக்கும் என்று சிங்கப்பூர் SP குழுமம் நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிக அளவில் உயர்ந்திருப்பதால் தான், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தவிர்த்து, வரும் மார்ச் 31, 2022-ல் முடிவடையும் காலாண்டில் குடும்பங்களுக்கான மின் கட்டணம் கிலோவாட்க்கு 24.11 சென்ட்களில் இருந்து 25.44 காசுகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
GST உட்பட, ஒரு kWh-க்கு 27.22 சென்ட் வீதம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த அதிகரிப்பு நான்கு அறைகள் கொண்ட வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கான சராசரி மாத மின் கட்டணம் GST-க்கு முன் S$4.70 அதிகரிக்கும் என்று SP குழுமம் தெரிவித்துள்ளது. தற்போது சிங்கப்பூரின் 95 சதவீத மின்சாரம், இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது,” என்று SP குழுமம் மேலும் கூறியது.
“கடந்த சில மாதங்களில், மீண்டுவரும் பொருளாதார நடவடிக்கைகளின் சங்கமம், கடுமையான வானிலை நிகழ்வுகள் மற்றும் தொடர்ச்சியான எரிவாயு உற்பத்தி தடைகள் ஆகியவை உலகளாவிய எரிசக்தி சந்தையின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. இந்த காரணிகள் பல சந்தைகளில் மின்சார விலைகளை உயர்த்தியுள்ளன.” எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) அமைத்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் SP குழுமம் ஒவ்வொரு காலாண்டிலும் மின் கட்டணங்களை மதிப்பாய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் மின் கட்டணம் என்பது நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது – உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் ஆற்றல் செலவுகள், நெட்வொர்க் செலவுகள் மற்றும் SP குழுமத்திற்குச் செலுத்தப்படும் சந்தை ஆதரவு சேவைக் கட்டணங்கள், அத்துடன் சந்தை நிர்வாகம் மற்றும் ஆற்றல் சந்தை நிறுவனம் மற்றும் பவர் சிஸ்டம் ஆபரேட்டருக்கு செலுத்தப்படும் மின் அமைப்பு இயக்கக் கட்டணங்கள் ஆகும்.