TamilSaaga

“உங்களை வியப்பில் ஆழ்த்தும், சிங்கப்பூரின் சின்ன சின்ன ரகசியங்கள்” : மிஸ் பண்ணாமல் படிக்கவேண்டிய பதிவு

சிங்கப்பூர் –  ஒவ்வொரு முறை பார்வையிடும் போதும் ஒவ்வொரு விதமாக வியக்க வைக்கும் விந்தைகள் நிறைந்த ஒரு இடம் !

தென்கிழக்கு ஆசியாவின் இந்த அழகிய நகரம் / நாடு மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஒரு களிப்பூட்டும் கலவை.

ஏற்கனவே நாம் நமது ஆரா அருணா  பக்கங்களில் சிங்கப்பூரை பற்றிய பலவற்றை பார்த்திருக்கிறோம் என்றாலும்கூட, இன்னும் இன்னும் எழுதுவதற்கும், வியப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் ஏராளம் ஏராளம் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

இதோ இந்த வாரமும் சிங்கப்பூரைப் பற்றி நீங்கள் அறியாத, அறிந்து கொள்ளவேண்டிய, அடடே! சொல்ல வைக்கும் சில சின்ன சின்ன இரகசியங்கள்.

சிங்கப்பூர் இதுவரை 1905 முதல் தனது நேர மண்டலங்களை  6 முறை மாற்றியுள்ளது. இப்போது அதன் நேர மண்டலம் GMT+8. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது இப்போதும் தவறாகத்தான் உள்ளது. சிங்கப்பூரில் நேர மண்டலம் GMT+ 7.5 ஆக இருக்கவேண்டும். விரைவில் ஏழாவது மாற்றத்தையும் எதிர்பார்க்கலாம் போல…..

இதையும் படியுங்கள் : “இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய சேவை”

நம்ம ஊரில் எங்கும் கிடந்து நமக்கு எரிச்சலை உண்டாக்கும் அசை மிட்டாய் என்று சொல்லக்கூடிய சூயிங்கம் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அதை வாங்கலாம் ! மெல்லலாம்!

சிங்கப்பூர் உலகின் 20 சிறிய நாடுகளில் ஒன்று என்னும் பெயர் பெற்றது  . அதன் முக்கியமான தீவு  நகரம் 42 கிலோ மீட்டர் நீளமும் 23 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது சிங்கப்பூரின் மொத்த நிலப்பரப்பு வெறும் 683 சதுர கிலோ மீட்டர்கள் தான்.

சிங்கப்பூரில் கட்டடங்களை எவ்வளவு உயரமாக கட்ட வேண்டும் என்பதற்கான அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது  அது 280 மீட்டர் . அதாவது நீங்கள் சிங்கப்பூரில் 280 மீட்டர்களுக்கு மேல் உயரமான கட்டிடங்களை கட்ட முடியாது. கட்டவும் கூடாது.

அதே சமயம் சிங்கப்பூரின் தஞ்சோங் பகார் மையம் வழக்கமான 280 மீட்டர்களை தாண்டி, சிறப்பான அனுமதி பெறப்பட்டு 290 மீட்டர்கள் வரை கட்டப்பட்டு, சிங்கப்பூரின் மிக உயர்ந்த கட்டிடமாக திகழ்கிறது.

வரலாற்றுப் பின்னணியில் ‘சிங்கங்களின் நகரம்’ என்று பொருள்படும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ‘சிங்கப்பூர்’ என்னும் பெயர் உருவாகி இருந்தாலும், இந்தப் பெயர் உருவானபோது சிங்கப்பூரில் சிங்கங்களே இல்லை. அப்படியா! ஏன்? எப்படி? என்ற கேள்விகள் எல்லாம் வந்தால் தவறாமல் நமது கடந்த வார பக்கத்தை கொஞ்சம் படித்து விட்டு வந்து விடுங்கள்.

ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்னும் இந்த நான்கு மொழிகள் அலுவல் மொழிகளாக இருந்தாலும், இவைகளையும் தாண்டி சிங்கப்பூர் வாசிகள் சிங்க்லீஷ் என்கிற வட்டார மொழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நம்ம ஊரு தங்கிலீஷ் போல.

இந்தச் சிங்க்லீஷ் மொழியை வெளிநாட்டவர்களால் அதிகம் புரிந்துகொள்ள முடியாது என்றாலும், ஆச்சரியமூட்டும் உண்மை என்னவென்றால் இந்தச் சிங்க்லீஷ் வழக்கு மொழியின் 27 வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய, ஜப்பானை தாயகமாகக் கொண்ட யோகுல்ட் எனப்படும் இனிப்பான பால் பானம், ஆசியாவிலேயே அளவில் பெரியதாக சிங்கப்பூரில் தான் கிடைக்கிறது.

உலகிலேயே சிங்கப்பூரர்கள் தான் மிக வேகமாக நடப்பவர்களாம். ஒரு மணிக்கு 6.15 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார்களாம்.

டின்டின் என்று சொல்லப்படக்கூடிய, உலகில் மிக பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட கடைகள் அதிகாரப்பூர்வமாக மொத்தம்  ஐந்து  தான் இருக்கிறது.  அவற்றில் ஒன்று, சீனா டவுன் என்று சொல்லக்கூடிய சிங்கப்பூர் பகுதியில் இருக்கிறது. மீதமுள்ள நான்கும் ஜப்பான் மற்றும்  ஐரோப்பாவில் அமைந்துள்ளன.

உலகிலேயே வணிகம் செய்வதற்கு எளிதான இடங்கள் என்று உலக வங்கி அறிவித்துள்ள நாடுகளில்  நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் இரண்டாம் இடத்தைப் பெறுகிறது.

திறந்த வெளியில், சுவையான, பலதரப்பட்ட உணவுப்பொருட்களை விற்கக்கூடிய ஹாக்கர் சென்டர் – Hawker Center சிங்கப்பூரில் மிகப்பிரபலம். அவற்றில் 260 நடமாடும் உணவுக் கடைகளுடன் சீனா டவுன் பகுதியில் உள்ள ஹாக்கர் சென்டர் தான் சிங்கப்பூரிலேயே மிகப்பெரியதாக கருதப்படுகின்றது.

ஆயிரம் மதிப்புள்ள சிங்கப்பூர் டாலர் நோட்டின் பின்பகுதியில் மிக சிறிதான அளவில் சிங்கப்பூரின் தேசிய கீதம் எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக நம்பப்படுவது போல சிங்கப்பூர் ஒரு தீவு நாடு அல்ல . அது 63 தீவுகளின் ஒட்டு மொத்த வடிவம்.

சாங்கி விமான நிலையத்தில் நாள் முழுவதும்,இலவச திரைப்படங்கள் திரையிடப்படும்  2D இரு பரிமாண சினிமாக்கள் முதல் 4D நான்கு பரிமாண சினிமாக்கள் வரை நீங்கள் அங்கே பார்த்து மகிழலாம்.

சிங்கப்பூரை சேர்ந்த 7 வயது மாணவர் தான், இதுவரை உலகிலேயே மிக இளவயதில் GCE எனப்படும் தேர்வில் வேதியியல் தேர்வில் O பிரிவில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுகிறார்.

சிங்கப்பூரில் பொது கழிப்பறையை பயன்படுத்திய பிறகு, அதை சுத்தம் செய்யாமல் அல்லது தண்ணீர் ஊற்றாமல் வெளியே வந்தால் 150 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். இதற்கு அங்கே சட்டமே உள்ளது.

கழிப்பறை சுத்தத்தை பொருத்தவரை சிங்கப்பூர் மிக ஆர்வமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நவம்பர் 19ஆம் தேதி உலக கழிப்பறை தினம் கொண்டாடப்படுவதற்கான அறிவிப்புக்கும், 2001 இல் உலக கழிப்பறை அமைப்பு உருவாக்கப்பட்டதற்கும் சிங்கப்பூர் மிக முக்கிய காரணம்.

35 மீட்டர் உயரத்திலிருந்து விழக்கூடிய உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சி சிங்கப்பூரில் தான் அமைந்துள்ளது.

City – State என்று சொல்லக்கூடிய நகர – மாநிலங்கள் மூன்று மட்டும் தான் உலகில் உள்ளன  மொனாக்கோ, வியட்நாம் இரண்டோடு சிங்கப்பூரும் அவற்றில் ஒன்றாகும்.

ஹிப்பி என்று சொல்லக்கூடிய  ஆண்கள் நீண்ட முடி வைக்கும் கலாச்சாரம் உலகெங்கும் வளர்ந்து வருவதற்கு பயந்து, 1970களில் சிங்கப்பூர் அரசாங்கம் ஆண்கள் நீண்ட முடி வளர்ப்பதற்கு தடை விதித்தது.

ஆசியாவிலேயே ஊழல் குறைந்த நகரமாகவும், உலகிலேயே ஊழல் குறைந்த நகரங்களில் 5வது இடத்திலும் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் நவம்பர் 7ஆம் தேதி மரம் நடும் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் மரங்களை நடுகிறார்கள். பிறந்தநாள் மற்றும் திருமண நாளின் நினைவாக மரங்களை தத்தெடுத்து பராமரிக்கும் பழக்கமும் சிங்கப்பூரில் நிலவுகிறது.

இன்றுவரை சிங்கப்பூரில் தடியடி என்பது சட்டபூர்வமான தண்டனையாக இருந்துவருகிறது.

தனியார் வாகனங்களை பயன்படுத்துவதை சிங்கப்பூர் அரசாங்கம் பெரிதாக ஊக்கப்படுத்துவது இல்லை. கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான சான்றிதழ் பெறுவதற்கு காரின் விலையை விட 1.5 மடங்கு அதிகமான தொகை செலுத்த வேண்டி உள்ளது.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஆண்களும் கட்டாயமாக இராணுவ சேவை செய்ய வேண்டும்.

ஆறில் ஒரு சிங்கப்பூரர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான அளவில் சொத்துக்கள் வைத்துள்ளார். இது உலகின் மற்ற எந்த நாடுகளை விடவும் மிக அதிகமாகும். பணக்கார நாடு தான் போங்க….

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், உலகின் சிறந்த விமான நிலையமாக அடுத்தடுத்த முறையாக நான்கு தடவைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

உலகிலேயே அதிக அளவு சொந்த வீடு உடையவர்களின் சதவீதம் சிங்கப்பூரில் தான் இருக்கிறது அங்கே ஏறக்குறைய 92 சதவீதம் பேர் சொந்த வீடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் இரண்டு புதிய உணவகங்கள் திறக்கப்படுகிறது.

சிங்கப்பூர் குடிமக்கள் சீனா, தென் கொரியா, வட கொரியா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு போவதற்கு விசா தேவையில்லை.

தமிழ் சாகா சிங்கப்பூரின் அனைத்து செய்திகளையும் உடனடியாக Telegram செயலியில் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

மலேசியாவிடம் இருந்து சுதந்திரம் பெற சிங்கப்பூர் எந்த போராட்டமும் செய்யவில்லை  மாறாக சிங்கப்பூரை தூக்கி எறிய , பிரித்துவிட மலேசியாவே வாக்கெடுப்பு முறையில் முடிவு செய்தது.

சிங்கப்பூரில் பொது இடங்களில் பேசக்கூடாதவை என்று சில இன்னமும் இருக்கின்றன. அவைகளில் ஒன்று அரசாங்கத்தை விமர்சிப்பது. அதையும் மீறி பேசக்கூடாதவைகளை பற்றி பொது இடங்களில் பேசினாலோ, விவாதம் செய்தாலோ, அதன் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஆனால் அவைகளை விட்டுவிட்டு சிங்கப்பூரைப் பற்றி பேசுவதற்கும், தெரிந்து கொள்வதற்கும், இன்னும் அதிகமாய் இருக்கத்தான் செய்கின்றன. எனவே அவைகளை பற்றி நாம் அறிந்து கொள்வோம்! பேசுவோம்! நேரிலும் போய் ரசிப்போம்…!!! அன்புடன் ஆரா அருணா

Related posts