சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் மருத்துவமனைகளில் பார்வையாளர்களை அனுமதிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது சிங்கப்பூரில் நிலைமை சீரடைந்து வருவதால் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளின் பிரிவுக்கு வருகையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் போட்டுக்கொள்ளாதவர்களுக்கும் சில மாறுபட்ட கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விதித்துள்ளது. அதனடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், தொற்றில் இருந்து மீண்டவர்களும் உள்நோயாளிகள் பிரிவுகளுக்குள் நுழைவதற்கு முன்பாக தொற்றுக்கு எதிர்மறையாக சோதனை செய்ய தேவையில்லை.
அதே சமயம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக தொற்று இல்லை என்ற சோதனையை மேற்கொண்டு அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நோயாளியும் ஒரு முறைக்கு இரண்டு பார்வையாளர்களைப் பதிவு செய்யலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் இரண்டு வருகையாளர்களை பெறலாம். அவர்களது படுக்கைக்கு அருகில் ஒரு பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்.
மேலும் மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு ஐந்து பதிவு செய்யப்பட்ட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், படுக்கைக்கு அருகில் இரண்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று MOH தெரிவித்துள்ளது.