TamilSaaga

“பசீர் பஞ்சாங் மொத்த விற்பனை மையம் 3 நாள் மூடல்” : பழம் மற்றும் காய்கறி விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையம் நாளை திங்கள்கிழமை (செப்டம்பர் 27) பிற்பகல் முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டும். வளாகத்தில் பணிபுரிந்த மற்றும் பார்வையிட்ட மக்களிடையே பெருந்தொற்று வழக்குகள் கண்டறியப்பட்டதாக சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையம் ஆழ்ந்த சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக SFA தெரிவித்துள்ளது.

இந்த தற்காலிக மூடல் சிங்கப்பூரின் பழம் மற்றும் காய்கறி விநியோகத்தில் “சில” தடங்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று SFA இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மையம் வரும் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்டு செப்டம்பர் 30 அன்று மாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்று SFA தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் பழம் மற்றும் காய்கறி இறக்குமதியில், முறையே 30 சதவீதம் மற்றும் 50 சதவீதம் பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையத்தில் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“பழங்கள் மற்றும் காய்கறிகள் விநியோகத்தில் சில இடையூறுகள் இருந்தாலும், சிங்கப்பூரின் ஈரச்சந்தைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் கடைகள் திங்கள் கிழமைகளில் மூடப்படுவதால் இது மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும்” என்று SFA கூறியது. தற்காலிகமாக மூடப்பட்டதால் சிங்கப்பூரின் உணவு விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, பழங்கள் மற்றும் காய்கறி சங்கங்கள், பாதிக்கப்பட்ட வணிகர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற பங்குதாரர்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

“பெரிய பல்பொருள் அங்காடிகள் தங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பங்குகளை அதிகரிக்க முயற்சிகள் செய்து வருகின்றன என்றும் SFA தெரிவித்துள்ளது.

Related posts