SINGAPORE: சிங்கப்பூரில் பெருமூளை வாத நோயுடன் பிறந்தவர் தான் ரோஸ்ஸானா அலி. வயது 30. உடலில் குறைபாடுடன் பிறந்ததன் விளைவாக தனது கல்வியை முடித்த பிறகு கடந்த 2011ம் ஆண்டில் இருந்தே வேலை தேடுவதில் சிரமங்களை எதிர்கொண்டார் அவர். வேலைக்காக பல நேர்காணல்களுக்கு சென்றபோதும் அவருக்கு மிஞ்சியது தோல்வியே.
சுமார் நான்கு ஆண்டுகள் செல்லும் நேர்காணலில் எல்லாம் தோல்வியுற்ற நிலையில், வேலை மீது இருந்த ஆசையே ரோஸ்ஸானா அலிக்கு வெறுத்துவிட்டது. ‘யார் கைவிட்டாலும் உண்மையான நட்பு கைவிடாது; என்பார்கள். அதுபோல அவருக்கு இறுதியாக கைகொடுக்க வந்தவர் தான் அவரது சிறந்த நண்பரான ஜூனி சியாஃபிகா ஜுமாத். அலியை போல அவரும் அதே நோயால் பாதிக்கப்பட்டவரே. அவர் தான் கடந்த 2018ம் ஆண்டு அலியை கிராப்ஃபுட் டெலிவரி பார்ட்னராக வேலை செய்ய ஊக்குவித்தார்.
ஆரம்பத்தில் அந்நியர்களுடன் பழகுவதற்கான பயம் காரணமாக அந்த வேலையில் சேர தயங்கிய ரோஸ்ஸானா இறுதியில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று உணவு வழங்கும் வேலையில் களமிறங்கினார். இந்த 2022ம் ஆண்டில் சுமார் நான்கு ஆண்டுகளாக GrabFood டெலிவரி பார்ட்னராக பணிபுரிந்து வருகின்றார். தனது வாழ்க்கை இப்பொது சிறப்பாக மாறியுள்ளதாகவும், மனதளவிலும் பொருளாதார ரீதியாகவும் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும் கூறுகிறார்.
ரோஸ்ஸானா தற்போது பூன் லேயில் வசித்து வருகின்றார், அதனால் அவரது Food டெலிவரிகள் ஜூரோங் பாயின்ட்டை மையமாக வைத்து அவருக்கு வழங்கப்படுகிறது. அவர் தனது மின்சார சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி மட்டுமே டெலிவரி செய்யமுடியும் என்பதால், தனக்கு வரும் உணவு ஆர்டர்களை தனக்கு தகுந்தாற்போல எடுக்க அலி இப்பொது பழகிக்கொண்டார். அவர் தனது சக்கர நாற்காலியால் அணுகக்கூடிய ஆர்டர்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்.
சுமார் நான்கு ஆண்டுகளாக அவர் டெலிவரி வேலை செய்வதால் தற்போது அலிக்கு எல்லா வழிகளும் அத்துப்படி. தன்னால் எங்கு எவ்வளவு வேகமாக செல்லமுடியும், எங்கு செல்ல நேரமெடுக்கும் என்பதுவரை எல்லாவற்றையும் துல்லியமாக கணித்து வைத்துள்ளார். ரோஸ்ஸானா ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வேலை செய்கிறார். ஒரு நாளைக்கு 10 முதல் 12 ஆர்டர்களை டெலிவரி செய்வதால் வாரத்திற்கு சராசரியாக $250 வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். நம் உடலில் ஊனம் ஒரு குறையே இல்லை, அது நம் மனதில் ஏற்படுவது தான் உண்மையான ஊனம் என்பதை நிரூபித்துள்ளார் இந்த வீர மங்கை.