சிங்கப்பூரில் வேலைதேடுபவர்களைக் குறிவைத்து 5 விதமான மோசடிகள் ஆன்லைனில் நடப்பதை அரசின் மோசடிக்கு எதிரான அமைப்பு கண்டுபிடித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று சூழலில், இந்த மோசடிகள் 2021-ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து நடைபெறுவதாகவும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
சிங்கப்பூர் போலீஸுக்கு இவை மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கின்றன. எளிதாக வேலை கிடைத்துவிடும், அதிகப்படியான கமிஷன் கிடைக்கும் என்றெல்லாம் கூறி மோசடி வலையில் மக்களை சில கும்பல்கள் வீழ்த்துகின்றன. ஆன்லைனில் எங்கோ இருந்தபடி அந்த கும்பல் மக்களிடம் பணத்தைக் கறந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள்.
அப்படியான 5 மோசடிகளைப் பற்றியும் அதில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றியும்தான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
- Fake mobile app
பாதுகாப்பு எதுவும் இல்லாத இணையதளங்களில் இருந்து மொபைல் ஆப்-களை டவுன்லோட் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அந்த செயலிகள் மூலம் எளிமையான வேலைகளைச் செய்து ஈஸியா பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்படும் ஆசை வார்த்தையில் விழும் மக்கள் அதை டவுன்லோட் செய்கிறார்கள். பின்னர், அந்த செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் பேமெண்ட் கேட்-வே மூலம் பணம் அல்லது கிரிப்டோ கரன்ஸிகளை டிரான்ஸ்ஃபர் செய்யச் சொல்கிறார்கள்.
வியாபாரத்துக்கு உதவும் வகையில் சில ஈஸியான டாஸ்குகள், ஆப்-ஐ டவுன்லோட் செய்து வைத்திருப்பவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அந்த டாஸ்குகளை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாகக் கொடுக்கப்படுகிறது. அந்த கமிஷன் தொகையும் செயலியில் காட்டப்படும். ஆனால், இங்கேதான் சிக்கலே தொடங்குகிறது. கமிஷன் தொகையைத் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற முயற்சித்தால், உங்களால் முடியவே முடியாது. இப்படி நூதனமாக போலியான செல்போன் செயலிகள் மூலம் ஒரு கும்பல் பணம் பறித்து வருகிறது. எச்சரிக்கையாக இருங்கள் மக்களே!
- Warning letter
முதல் மோசடியின் நீட்சியாகவே இது பார்க்கப்படுகிறது. போலி செல்போன் செயலி மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்கள், ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியேற முயற்சி செய்வார்கள் அல்லது அதிலிருந்து தங்கள் பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்ற முயற்சிப்பார்கள். அப்படி வெளியேற முயற்சிப்பவர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. குறிப்பிட்ட தொகையைக் கட்டினால் மட்டுமே தப்ப முடியும் என்கிற வகையில் எச்சரிக்கை வாசகங்களோடு உள்ளூர் அதிகாரிகளின் முத்திரையோரு வரும் கடிதம் உங்களுக்கு கிலி கொடுக்கும். நமக்கு எதுக்குப்பா பிரச்னை என்று எண்ணுபவர்கள் இந்த மிரட்டல் கடிதத்தால் மிரண்டுபோய், அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட நினைப்பார்கள். இப்படியும் மோசடி நடக்கிறது மக்களே உஷார்.
- Easy part-time job
சோசியல் மீடியா பேஜ்களை லைக் செய்தல், ஈஸியான மார்க்கெட்டிங் டாஸ்குகளை முடித்தல் போன்ற எளிதான வேலைகளைச் செய்து பார்ட் டைமா நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பின் அடிப்படையில் நடக்கும் மோசடி இது. இதில், இன்ட்ரஸ்ட் காட்டுபவர்களை ஒரு வெப்சைட்டுக்கு வரச் சொல்வார்கள். அந்த வெப்சைட்டில் வேலை செய்யும் திறன், நேரத்தை அடிப்படையாகக் கொண்டு பேக்கேஜ்களைத் தேர்வு செய்து, அடிப்படை விவரங்களைக் கொடுத்து சைன் – அப் செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள். தேர்வு செய்யும் பேக்கேஜ், கமிஷன் அடிப்படையில் முன்பணமாகக் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தச் சொல்வார்கள். அதைக் குறிப்பிட்ட தனி நபர் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய அறிவுறுத்தப்படும். அதை நம்பி முன்பணம் செலுத்தி பேக்கேஜைத் தேர்வு செய்யும் அப்பாவி மக்கள், கொடுக்கப்பட்ட டாஸ்குகளை சிரமேற்கொண்டு முடித்துக் கொடுப்பார்கள். அப்போதுதான் தெரியும், அவர்கள் சொன்னபடி கமிஷன் பணம் எதையும் கொடுக்க மாட்டார்கள் என்பது.
உஷாரய்யா உஷாரு… ஓரஞ்சாரம் உஷாரு..!
- Movie tickets
மோசடியிலேயே இது புது ரகம். சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கி வித்தா, பெரிய லாபம் பார்க்கலாம்னு ஒரு திணுசான ஐடியாவோட இந்த கும்பல் உங்களை அணுகும். அடடா, எந்த ரிஸ்குமே இல்லாம உக்கார்ந்த இடத்திலேயே நிறைய சம்பாதிக்கலாமேனு உங்க மண்டைக்குள்ள ஒரு ஐடியா கிளிக் ஆச்சுனா.. சோலி முடிஞ்சுச்சு. உடனே ஒரு செல்போன் செயலியை டவுன்லோட் பண்ணச் சொல்வாங்க. நீங்களும் ஆர்வமா அதை டவுன்லோட் பண்ணீங்கன்னா, அடுத்த டாஸ்க் ஆன்லைனில் சினிமா டிக்கெட்டை வாங்கச் சொல்வாங்க. அதுக்காக, குறிப்பிட்ட தொகையை உங்க வாலெட்ல ரீசார்ஜ் பண்ணச் சொல்வாங்க. அதுக்கான பணத்தை ஒரு அக்கவுண்டுக்கு அனுப்பச் சொல்வாங்க. நீங்களும் கொஞ்சமே கொஞ்சூண்டு பணத்தைப் போட்டு பெருசா ரிட்டர்ன்ஸ் எடுக்கலாம்னு அனுப்பிட்டீங்கனா அவ்ளோதான். அந்த பணமும் உங்க வாலெட்டுக்கு வரும். டிக்கெட்டை வாங்கி விற்பீங்க.. இது எல்லாமே வாலெட்லதான் கணக்கு காட்டப்படும். பணமா கடைசி வரை உங்க கைக்கு வரவே வராது. இதையெல்லாம் நீங்க புரிஞ்சுக்கிறதுக்குள்ள அந்த கேங், அடுத்த விக்கெட்டை வீழ்த்தியிருப்பாங்க.. இதையெல்லாம் மனசுல வைச்சு கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கது நமக்கும், நம்ம பர்ஸுக்கும் ரொம்பவே நல்லது.
- Shopee Pay
ஆன்லைன்ல நீங்க பொருட்கள் ஆர்டர் பண்ணா, அதுக்கு போனஸா கமிஷன் கிடைக்கும்னு சொல்ற கான்செப்ட் இது. பொருளுக்கு பொருளும் ஆச்சு கமிஷனும் கிடைக்கும்னு ஆசை வலை விரிப்பாங்க. இதுல சிக்குறவங்களை Shopee Pay-ன்ற ஆப்-ஐ டவுன்லோட் பண்ணச் சொல்வாங்க. ஃபேமஸான ஷாப்பிங் தளமான Shopee-க்கும் இதுக்கும் உண்மையிலேயே எந்தத் தொடர்பும் இருக்காது. ஆனால், அதே மாதிரியா டிசைன், லோகோனு ஒரிஜினல் மாதிரியே இருக்கதால, நிறைய பேரு இந்த மோசடில சிக்க வாய்ப்பிருக்கு. ஒரிஜினல் Shopee ஆப்-க்குனு தனியா பேமெண்ட் வாலெட் கிடையாது. ஆனால், இந்த ஃபேக் ஆப்-ல ஷாப்பிங் பண்ண குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டா கட்டச் சொல்வாங்க.
அப்படி டெபாசிட் கட்டுறதுக்காக நீங்க கிரிப்டோகரன்ஸியை வாங்கி, அதை இன்னொரு அக்கவுண்டுக்கு மாத்தணும்னு சொல்வாங்க. அப்போதான் Shopee Pay வேலெட்ல பணம் வரும்னு சொல்லப்படும். இதையெல்லாம் நம்பி பணம் கட்டுறவங்க, தங்களோட பணத்தை அப்பவே இழந்துருவாங்க. ஆனால், இந்த சூட்சுமம் புரிய கொஞ்ச நாள் ஆகலாம். இதுல கட்டுற பணத்தை உங்களால திரும்ப எடுக்கவே முடியாது. சூதானமா இருங்க மக்களே..!
இப்படியான மோசடிகள்ல இருந்து எப்படி தப்பிக்குறது… அதுக்கு 6 வழிகள் இருக்கு.. இதைக் கடைபிடிச்சீங்கன்னா மோசடி கும்பல் வலையில் விழாமல் தப்பிக்க முடியும்.
- அடையாளங்களில் கண் வையுங்கள் – குறிப்பா நாம ஒரு வெப்சைட்டுக்கோ, ஆப்-புக்கோ போகும்போது அது ஒரிஜினலா இல்லையான்றது அவங்க பயன்படுத்துற அடையாளங்களை வைச்சு கண்டுபிடிக்கலாம். எப்படியெல்லாம் ஏமாத்த டிரை பண்றாங்கனு கண்டுபிடிங்க.
- நிதானமா யோசிங்க – வேலை, பார்ட் டைம் ஜாப் இப்படியெல்லாம் ஆஃபரோட ஒரு மெசேஜோ, மெயிலோ வந்தா உடனே ரியாக்ட் பண்ணாம இது உண்மையா இருக்குமானு நிதானமா யோசிச்சுப் பார்த்து, அதுக்குப் பின்னாடி இருக்க லாஜிக் சரியானு சிந்திச்சுப் பாருங்க.
- அவசரம் வேண்டாம் – உங்கள் பெர்சனல் தகவல்களையோ, வங்கிக் கணக்கு விவரங்களையோ கொடுப்பதில் அவசரம் வேண்டாம்.
- மத்தவங்ககிட்டயும் கேளுங்க – இப்படியான வேலை அல்லது ஆஃபர் வந்தால் அது உண்மையாக இருக்குமானு நண்பர்கள், தெரிஞ்சவங்கனு மத்தவங்ககிட்டயும் செக் பண்ணிக்க வேண்டியது அவசியம்.
- பெர்சனல் தகவல்கள், பேங்கிங் பாஸ்வேர்ட் முக்கியம் – உங்களோட பெர்சனல், பேங்க் டீடெய்ல்ஸ் கேட்டு வர்ற ரெக்வெஸ்ட் உண்மையாகவே இருக்கும்னு நீங்க நினைச்சாலும் அந்தத் தகவல்களை எந்தவொரு இடத்திலும் ஷேர் பண்ணாதீங்க.
- உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக உணர்ந்தால், எந்தவித தயக்கமும் இல்லாமல் நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் சட்டப்பூர்வமான உதவியைக் கேட்டுப் பெறுங்கள்.