சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களில் எச்டிபி எஸ்டேட், தொழில்துறை மற்றும் மத்திய வணிக மாவட்டத்தில் சுமார் 200 பொது வாகன நிறுத்துமிடங்களில் 600க்கும் மேற்பட்ட மின்சார வாகன சார்ஜர்கள் நிறுவப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜர்களின் முதல் தொகுப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சிங்கப்பூரின் மத்திய பிராந்தியத்தில் 210 சார்ஜிங் வசதிகள், வடக்கில் 50, வடகிழக்கில் 100, கிழக்கில் 120 மற்றும் மேற்கில் 140 சார்ஜிங் வசதிகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியள்ளது.
சிங்கப்பூரின் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையம் (URA) மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட அறிக்கையில், இந்த சார்ஜிங் பாய்ண்டுகளுக்கான டெண்டர்களை குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளது. URA மற்றும் LTA ஆகிய இந்த இரண்டு கூட்டமைப்புகளும் EV சார்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட முழுமையான சேவைகளை வழங்க உறுதியளித்துள்ளன.
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை நிலப் போக்குவரத்துத் தொழில்துறை தின உரையில், மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் சிங்கப்பூரின் மூலோபாயத்தின் ஒரு முக்கிய அம்சம் இந்த ஈவி சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்குவதாகும் என்று கூறினார்.