TamilSaaga

“இங்க சைக்கிள் ஓட்டக்கூடாது” : தொடக்கப் பள்ளி மாணவனை தாக்கிய முதியவர் – ஐந்து நாள் சிறை

சிங்கப்பூரில் ஒரு பொது வீட்டுத் தொகுதி அருகே தொடக்கப் பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிள் ஓட்டுவதை பார்த்த 67 வயது முதியவர் அந்த மாணவனை தாக்கிய நிலையில் தற்போது அந்த முதியவருக்கு ஐந்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த சுவா சேக் யோங், 14 வயதிற்குட்பட்ட நபரை தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நேற்று வியாழக்கிழமை (செப் 2) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 13ம் தேதி, 2020ம் ஆண்டு அன்று பிளாக் 438 ஹூகாங் அவென்யூ 8க்கு அருகிலுள்ள பாதையில் சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டுவதைச் கண்டுள்ளார் சுவா. உடனே அந்த மாணவனிடம் சென்று இதுபோல நடைபாதையில் சைக்கிள் ஓட்டாதே என்று கூற, அந்த மாணவனும் அவர் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அந்த இடத்தை விட்டு புறப்பட்டுள்ளான். சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அந்த பாதையில் சைக்கிள் ஓட்டுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு வாரம் கழித்து நவம்பர் 20ம் தேதியன்று, சுவா அந்த சிறுவன் அதே பாதையில் சைக்கிள் ஓட்டுவதைக் கண்டுள்ளார். உடனே அவனிடம் சென்று, மீண்டும் நீ இந்த பாதையில் சைக்கிளில் செல்வதை பார்த்தல், சைக்கிள் டயர்களில் காற்றை இறக்கிவிட்டுவிடுவேன் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மீண்டும் 15 நிமிட இடைவெளியில் அதே மாணவன் அந்த பாதையில் சைக்கிள் ஓட்டுவதை கண்ட அவர் அவனை வழிமறிக்க, அந்த மாணவன் இந்த இடத்தில் சைக்கிள் ஓட்ட LTA அனுமதி அளித்திருப்பதாக கூறியுள்ளான். மேலும் அதுகுறித்து அவன் விளக்கமளித்துக்கொண்டு இருந்த வேலையில் அவனை அந்த முதியவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

மேலும் அவனுடைய செல்போனை தட்டிவிட்டு மேலும் பல முறை அவனை தலையிலும் நெஞ்சிலும் தாக்கியுள்ளார். இந்த நிகழ்வை கண்ட அருகில் இருந்த ஒருவர் இதுகுறித்து அந்த சிறுவனின் பெற்றோருக்கும் காவல்துறைக்கும் புகார் அளித்துள்ளார்.

Related posts