நமது சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகாலமாக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை என்பது சற்று அதிகரித்தே வருகின்றது. இந்த கொரோனா காலகட்டத்தில் இந்த அளவு குறைந்திருக்கும்போதும், பொதுவாக பார்க்கும் பட்சத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு என்பது சிங்கப்பூரை பொறுத்தவரை கணிசமாக உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.
மேலும் சிங்கப்பூரில் தங்கள் நிறுவனங்களை வைத்திருக்கும் வெளிநாடுகளை சேர்ந்த பல முதலாளிகள் பல்வேறு நாடுகளில் இருந்து (குறிப்பாக இந்தியாவின் தமிழகத்தில் இருந்து) ஊழியர்களை அழைத்து வந்து அவர்களுக்கு இங்கு வேலை அளிக்கின்றனர். இதற்கென்று அந்த ஊழியர்களிடம் கணிசமான தொகை பெறப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.
அவ்வாறு இந்திய மதிப்பில் சில லட்சங்கள் செலவு செய்து சிங்கப்பூர் வரும் பல தொழிலாளர்கள் நல்ல நிலைமைக்கு இன்று உயர்ந்துள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. அவர்கள் தங்களின் இரண்டாம் தாயகமாகவே சிங்கப்பூரை கருதுகின்றனர் என்றால் அது மிகையல்ல. அதே சமயம் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து வரும் அந்த முதலாளிகளின் ஏஜெண்டுகளும் தங்களை நம்பி சிங்கப்பூர் வரும் பணியாளர்களை சிறந்த முறையில் கவனித்து கொள்கின்றனர்.
சட்ட ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் அவர்களை நல்ல முறையில் கவனிக்கும் தங்க மனசு கொண்ட நல்ல முதலாளிகள் இருக்கின்றார். அதே நேரத்தில் பொருளாசை கொண்ட சில சொற்ப முதலாளிகள் செய்யும் கொடூரமான செயல்கள் சிலரை கலங்கவைக்கிறது.
இந்திய மதிப்பில் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அதிக சம்பளத்திற்கு அவர்களை சிங்கப்பூரில் வேலைக்கும் அமர்த்துகின்றனர். ஆனால் வேளைக்கு வந்த சில நாட்களிலேயே அவர்களிடம் தங்களுடைய கைவரிசை காட்டுகின்றனர். அதிக வேலைப்பளுவினை கொடுப்பது, நீண்ட நேரம் வேலை வாங்குவது என்று அவர்களை உச்சகட்ட கொடுமைகளுக்கு ஆளாக்குகின்றனர். இதை எல்லாம் சமாளிக்கும் பட்சத்தில் அந்த முதலாளிகள் அவர்களுடைய ஏஜெண்டுகளின் உதவியோடு சில லோக்கல் ஆட்களை கொண்டு தேவையின்றி அந்த ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட வைக்கின்றனர்.
தாயகத்தை விட்டு வந்து உதவ ஆளின்றி சிங்கப்பூரில் அந்த ஊழியர்கள் தவித்து வரும் நிலையில் இந்த கொடுமை சம்பவங்கள் சிங்கப்பூர் போலீசார் கவனத்திற்கு செல்கின்றது. ஆனால் சட்ட ரீதியாகவும் உதவ ஆட்கள் இன்றி ஒரு கட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் செய்வதறியாது வேறு வழியின்றி சொந்த நாடுகளுக்கே திரும்பும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த கும்பலும் இவர்களை கொண்டு சில லட்சங்கள் சம்பாரித்த நிலையில், மீண்டும் அடுத்த வெளிநாட்டு ஊழியரை தேடி தங்கள் கொடூர பயணத்தை தொடர்கின்றனர்.
பல சிறப்பான முதலாளிகள் நாட்டில் உள்ள நிலையில் சில பொருளாசை கொண்ட முதலாளிகள் மற்றும் ஏஜெண்டுகள் செய்யும் தவறுகளால் லட்சிய கனவோடு சிங்கப்பூர் வரும் தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் தொழிலாளர்கள் நல்ல ஏஜெண்டுகளையும் முதலாளிகளையும் தேர்ந்தெடுத்து கவனத்தோடு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.