சிங்கப்பூரில் கடந்த 2017 மற்றும் 2020க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,200 மிருக வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோக வழக்குகளை அதிகாரிகள் விசாரித்தனர் என்று தேசிய மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று திங்கள்கிழமை (செப்டம்பர் 13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். திரு. லூயிஸ் என்ஜிக்கு (நீ சூன் GRC) எழுத்துப்பூர்வமாக அளித்த பாராளுமன்ற பதிலில், திரு. லீ “2017 முதல் 26 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், 113 பேருக்கு கூட்டு அபராதம் மற்றும் 87 பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் அளித்துள்ளதாகவும் கூறினார்.
260-க்கும் மேற்பட்ட வழக்குகளில் 30 சதவிகிதம் விலங்குகள் கொடுமை தொடர்பானவை, மீதமுள்ளவை பராமரிப்பு கடமையில் தோல்வியடைந்த செல்லப்பிராணி உரிமையாளர்களை உள்ளடக்கியது என்று தேசிய பூங்கா வாரியத்தின் (NParks) விலங்கு நல இயக்குனர் திரு. ஜோஷ்வா தியோ கூறினார்.
முதல் முறையாக குற்றவாளிகள் தங்கள் செல்லப்பிராணிகளை பராமரிப்பதில், கடமை தவறினால் 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் மேலும் 12 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதற்கிடையில், விலங்குகள் கொடுமை தொடர்பான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு முதல் முறை 15,000 வெள்ளி வரை அபராதம், 18 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மேலும் மீண்டும் அதே குற்றங்களை செய்பவர்களுக்கு அதிகபட்சம் 30,000 வெள்ளி அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.