TamilSaaga

“பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை” : சிங்கப்பூரில் HDB பிளாட் உச்சியில் Air-Con பழுது பார்க்கும் தொழிலாளி – கொதித்த நெட்டிசன்கள்

சிங்கப்பூரில் உள்ள ஒரு HDB பிளாக்கின் மிக உயரமான தளத்தில் பாதுகாப்புக் உபகரணங்கள் எதையும் பயன்படுத்தாமல் ஏர் கண்டிஷனிங் காம்ப்ரஸரில் பழுதுபார்த்த தொழில்நுட்ப வல்லுநரின் புகைப்படங்கள் தற்போது பேஸ்புக் வழியாக பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) சிங்கப்பூர் ஹோம் DIY என்ற Facebook குழுவில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள்,11 அல்லது 12 வது மாடியில் அமைந்துள்ள ஏர் கண்டிஷனிங் காம்ப்ரஸரின் மேல் அமர்ந்து ஒரு தொழிலாளி பழுது பார்ப்பதை காட்டுகின்றது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் உயிரிழந்த தொழிலாளி.. தக்க நேரத்தில் உதவி மனங்களை வென்ற “வைகோ மகன்” துரை – சிங்கப்பூரில் வலிமையாக கால் பதிக்கிறதா மதிமுக?

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர், பலர் ஏர் கண்டிஷனிங் சர்வீசிங் கான்ட்ராக்டர்கள், பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் தங்கள் வேலையைச் செய்வதாகவும் கூறினார்கள். வியாழன் அன்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்பு கொண்ட போது மனிதவள அமைச்சகம் (MOM) இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால் பணியிட காயங்கள் மற்றும் உயரத்தில் இருந்து விழுவதால் ஏற்படும் இறப்புகள் பற்றிய புள்ளிவிவரங்களை MOM வழங்கியது.

2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான MOMன் பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார அறிக்கையின்படி, உயரத்தில் இருந்து விழுவது பணியிட மரணங்களுக்கான முதல் இரண்டு காரணங்களில் ஒன்றாகும். அந்த காலகட்டத்தில் 35 பேர் உயரத்திலிருந்து கீழே விழுந்த விபத்துகள் பதிவாகியுள்ளன, இது 2020ன் இரண்டாம் பாதியில் 32 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9), 28 வயதான வங்காளதேச தொழிலாளி ஒருவர் சைனாடவுன் பாயின்ட்டின் (மால்) நான்காவது மாடியில் இருந்து விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படியுங்கள் : “ஆறு மாதத்தில் வேலை கிடைக்கிறது” : புதிய சாதனையை படைத்து அசத்தும் சிங்கப்பூர் – பதில் சொல்லும் Survey Report

சிங்கப்பூரின் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸின் டாக்டர் கோ யாங் மியாங் பேசும்போது, ஏர் கண்டிஷனிங் பராமரிப்பு ஒப்பந்ததாரர்களால் பாதுகாப்பு குறித்து இன்னும் அதிகமாக கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார். மேலும் “வீடு மற்றும் கட்டிட உரிமையாளர்கள் பொருத்தமான பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட ஒப்பந்ததாரர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த நிலைமையை மேம்படுத்த உதவலாம்” என்றார் அவர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts