சிங்கப்பூரில் கடந்த வெள்ளியன்று (ஜனவரி 21) மாலை அப்பர் புக்கிட் திமாவில் உள்ள கிரீன்ரிட்ஜ் கிரசென்ட்டில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகே 11 வயது சகோதரர்கள் இருவர் மர்மமான முரையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததாக CNAன் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் Stand Up Comedian – யார் இந்த குமரேசன் சின்னதுரை?
“காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, விளையாட்டு மைதானத்தின் அருகே அந்த நபரின் இரண்டு 11 வயது மகன்கள் அசையாமல் கிடப்பதைக் கண்டனர் மற்றும் ஒரு துணை மருத்துவரால் சம்பவ இடத்திலேயே அந்த சகோதரர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்” என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கை “இயற்கைக்கு மாறான” மரணமாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். மேற்கொண்டு விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன. Holland-Bukit Timah GRCன் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சிம் ஆன், விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போது ஊகங்களில் இருந்து சற்று விலகி இருக்குமாறு பொதுமக்களுக்குஅறிவுறுத்தி இருந்தார்.
“இந்தச் செய்தி எங்கள் சமூகத்திற்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளது என்பதை நான் அறிவேன். காவல்துறை விசாரித்து வருகிறது. காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கவும், யுகங்களை தவிர்த்து பொதுமக்களின் அன்பான ஒத்துழைப்பைப் பெறவும் எங்கள் குடியிருப்பாளர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். “அந்த பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அவ்விரு பிள்ளைகளையும் கொன்றதாக அவர்களின் தந்தையை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை காவல்துறையே நேற்று (ஜன.22) இரவு 11:15 மணிக்கு உறுதி செய்துள்ளது.
சாட்சியங்களின் அடிப்படையில் அந்த சிறுவர்களின் 48 வயதான தந்தை கைதாகியுள்ளதாக தெரிகிறது. அவர்கள் வசிக்கும் குடியிருப்பைச் சேர்ந்த யிம் என்பவர் அளித்த சாட்சியத்தில், “எனது வீட்டு வேலைக்காரர், ஒரு பெண் அலறுவதைப் போன்ற சப்தத்தை கேட்டிருக்கிறார். இரு முறை அப்படி சப்தம் கேட்ட பிறகு, எல்லாம் அடங்கிவிட்டது. அந்த சப்தத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில், எப்போதும் அந்த விளையாட்டு மைதானத்தில் பிள்ளைகள் பேரிரைச்சலோடு விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆகையால், நாங்கள் அதனை கண்டுகொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அச்சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை (ஜன.24) திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொலை செய்ததற்கான காரணமும் விசாரணைக்கு பிறகு தெரிய வரும்.