TamilSaaga

சிங்கப்பூரர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் Stand Up Comedian – யார் இந்த குமரேசன் சின்னதுரை?

குமரேசன் சின்னத்துரை (எ) குமார்

நமது சிங்கப்பூர் நகைச்சுவை அரங்குகளில், நமக்கு மிகவும் பரிட்சயமான ஒரு பெயர் தான் குமார். நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், காபரே இரவு விடுதியில் நிரந்தர நடிகர், மேடை கலைஞர் மற்றும் திரைப்படக் கலைஞர் என்று பல புகழ்மிக்க பதவிகளுக்கு சொந்தக்காரர் தான் நம்ம குமார். 1968ம் ஆண்டு பிறந்த குமாரின் பூர்வீகம் இன்றைய சென்னையும் அப்போதைய மெட்ராஸ் தான், இவரின் தந்தை சின்னத்துரை 1960களில் சிங்கப்பூருக்கு வந்துள்ளார். சிங்கப்பூரில் திருமணம் முடிந்த நிலையில் குமாருக்கு 4 வயதாக இருக்கும் போது, இவரது பெற்றோருக்கு விவாகரத்தானது.

இதையும் படியுங்கள் : “ஒவ்வொரு 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை தொற்று இரட்டிப்பாகலாம்” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

பிஞ்சு வயதில் சின்னத்தாக்கத்துடன் தனது மூன்று சகோதரிகளுடன் பேட்டர்சன் சாலையில் உள்ள வீட்டில் தான் குமார் வளர்ந்தார். அதன் பிறகு கெய்ர்ன்ஹில் மற்றும் செலிகி ஆரம்பப் பள்ளிகளுக்குச் சென்று தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சிறுவயது முதலே மண்மணம் மாறாத ஒரு பாரம்பரிய பரதநாட்டிய நடனக் கலைஞராக விரும்பினார் நம்ம குமார். இதன் விளைவாக மேல்நிலைப் பள்ளி பயிலும்போது இந்திய நடன சங்கத்தில் சேர்ந்தார். நடனம் ஒருபுறம் என்றால் ராணுவம் மறுபுறம், ஆம் குமார் இராணுவத்தில் ஒரு “Combat Signaler”ஆக பணியாற்றினார், ராணுவத்தில் இருந்தபோது ஒருமுறை 2.4 கிமீ ஓட்டப்பந்தயத்தில் மின்னல் குமராக மாறி சாதனையும் படைத்துள்ளார்.

இறுதியில் 1987ம் ஆண்டில், தனது 22 வது வயதில் முதன்முறையாக Cheers நிறுவனத்தில் “Singing Waiters” பணியில் இணைந்தார். காலம் கடந்தது 1991ம் ஆண்டும் பிறந்தது, Tanglin Shopping Centreல் நடந்த ஒரு காமடி கிளப் நிகழ்ச்சியில் ஒரு இந்திய Drag Queen வேடமேற்று நடித்தார். அதுவரை தன்னில் ஒளிந்திருந்த நகைச்சுவை கலையை வெளிக்கொணர்ந்தார் குமார். (பெண்கள் அணியும் உடைகளை ஆடம்பரமான முறையில் அணியும் ஆண்களை தான் Drag Queen என்பார்கள்). குமார் 1992ம் ஆண்டு பூம்பூம் ரூம் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் குமார் புகழின் உச்சிக்கே சென்றார். தன் பாலின வேறுபாட்டிற்காக தன்னை நோகடித்த மக்கள் முன் கெத்தாக நின்றார். தற்போது, குமார் ஹார்ட் ராக் கஃபேவில் நிரந்தர கலைஞராக உள்ளார்.

வெற்றிகள் குவிய துவங்கியது, ஏப்ரல் 1993ல் நகைச்சுவை நிகழ்ச்சியான தி ரா ரா ஷோவின் மூன்று தொகுப்பாளர்களில் ஒருவராக குமார் தொலைக்காட்சியில் அறிமுகமானார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் இந்நிகழ்ச்சி குறித்து சில புகார்கள் எழுந்த நிலையில் பத்து மாதங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நீடித்தது. குமார் My Jolly Neighbor மற்றும் ஃப்ரண்ட் போன்ற பல்வேறு ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார். அவர் ருசியோ ருசி என்ற பயணக் குறிப்பு சமையல் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1997ம் ஆண்டு டிக் லீயின் இசையமைப்பான ஹாட் பேன்ட்ஸில் அவருக்கு ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. எ லைஃப் அலைவ், மீனா அண்ட் மீ, நாட் கில்டி உள்ளிட்ட நகைச்சுவை கலந்த இசை தொடர்பான படங்கள் மேலும் குமார் பிரலமானார். லண்டனில் நடந்த வால்பேப்பர் இதழின் முதல் ஆண்டு விழாவில் ஒன் மேன் ஷோக்களை வைத்து, குமார் தனது ஸ்டாண்ட்-அப் காமெடியையும் மேடைக்கு எடுத்துச் சென்றார். குமார் தி குயின் (2007), கிரேஸி கிறிஸ்மஸ், குமார் : ஸ்டிரிப்ட் பேர் & ஸ்டாண்டிங் அப் (2009-2010), குமார்ஸ் அமேசிங் ரேஸ் (2011-2012), கிங்ஸ் அண்ட் குயின்ஸ் ஆஃப் ஏசியா ஆகியவற்றிலிருந்து டிரீம் அகாடமியால் தயாரிக்கப்பட்ட வருடாந்திர தொடர் நிகழ்ச்சிகளிலும் (2011-2012) குமார் தன் திறமைகளை வெளிப்படுத்தினார்.

செப்டம்பர் 2011ல் அவர் தனது வாழ்க்கை வரலாற்றை, ஃப்ரம் ராக்ஸ் டு டிராக் என்ற புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தில், அவர் மக்கள் மத்தியில் தைரியமாக ஓரினச்சேர்க்கையாளராக தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். குமார் தனது நகைச்சுவை நடைமுறைகள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்கள் மூலம் அவரது பாலின அடையாளத்தை வெளிப்படுத்தினார். சிங்கப்பூர் கலாச்சாரத்தில், “டிராக் குயின்” என்றும் குமார் அழைக்கப்பட்டார்.

மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகங்களிலிருந்து வெள்ளித்திரையிலும் ஜொலிக்க தொடங்கினார். குமரி குப்புசாமி, கழிவறையில் அமைச்சராக இருந்தவர் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. சிறுவயது முதலே குமார் வீட்டில் இருந்தபோது பெண்களின் உடைகளை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட அவரது தந்தை ஏழு வருடங்கள் அவரிடம் பேசவில்லை என்று தன் அனுபவங்களை பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார் நம்ம குமார். தான் “ஆண் பாதி பெண்” என்றும், “ஆணை விட பெண் தான் அதிகம்” என்றும், குழந்தைகளால் திருநங்கை என்று அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரின் பிரபல Cryptocurrency Exchange நிறுவனம்.. கை வைத்த ஹேக்கர்கள் – 400 பயனர்களின் பணம் “சுவாஹா”

2009ம் ஆண்டு வெளிவந்த, ஸ்டிரிப்ட் பேர் அண்ட் ஸ்டாண்டிங் அப் திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக குமார் நடித்தார். சிங்கப்பூரில் நடைபெறும் வருடாந்திர LGBT பிரைட் நிகழ்வின் தூதராகப் பணியாற்றும் முதல் திருநங்கைப் பிரபலம் குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் குமரேசன் சின்னத்துரையின் வாழ்க்கை வலிகள் நிறைந்தது. அதை பொருட்படுத்தாமல், மற்றவர்களை மகிழ்விக்கும் முயற்சியில் அசைந்து கொடுக்காமல், மக்கள் மனதிலும் அப்ளாஸ்களை அள்ளுகிறார், இந்த நகைச்சுவை கலைஞன் குமரேசன் சின்னத்துரை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts