TamilSaaga

சிங்கப்பூர்வாழ் தமிழர்களுக்கு இந்த வருடம் தீபாவளி ஒரே அமர்க்களம் தான்… ‘லிட்டில் இந்தியாவில்’ காத்திருக்கும் பல கொண்டாட்டங்கள்!

தீபாவளி பண்டிகை என்பது நம் இந்தியாவில் மட்டும் தான் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை என்று தான் நாம் அனைவரும் நினைத்து கொண்டிருப்போம். உண்மையில் சொல்லப்போனால் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்னும் பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் இந்தியாவில் இருப்பதைவிட இன்னும் ஒரு படி அதிகமாகவே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அப்பகுதியே ஜொலிக்கும் வண்ணம் அலங்காரமே அசத்தலாக இருக்கும். நம் இந்திய பண்டிகைக்கு இந்த அளவிற்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பது அவர்கள் மெனக்கீட்டு செய்யும் அலங்காரத்திலேயே தெரிய வரும்.

இந்த வருடத்திற்கான தீபாவளி அலங்காரங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் களைகட்டும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்த வருட அலங்காரத்திற்கான தீம் முழுவதும் கிருஷ்ணன் ராதையை கொண்டாடும் விதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகள் அமைக்கப்படும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது எனவும் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு ஒளிரப்படும் விளக்குகளானது நள்ளிரவு 12 மணி வரை ஒளிர வைக்கப்படும் எனவும் வார இறுதி நாட்களில் இரவு ஒரு மணி வரை ஒளிர வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக நான்கு வெள்ளை குதிரைகளுடன் தங்க ரதம் பூட்டப்பட்டுள்ளது போன்ற வடிவமைப்பு பெர்ச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிறப்பு போட்டிகள் போன்றவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஆண்டிலும் இல்லாத இந்த ஆண்டில் புது முயற்சியான ‘தேக்கா ராஜா’ என பெயரிடப்பட்ட யானை வடிவிலான பெரிய பொம்மை அக்டோபர் 14, 28 மற்றும் நவம்பர் 4,11 ஆகிய தேதிகளில் சிராங்கூன் சாலையில் வலம் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டவர்களை திருப்திப்படுத்தும் விதமாக தீபாவளி ஃபுட் கோர்ட் ஒன்று செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை கிளைவ் சாலையில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அமர்க்களமாக இருக்கும் என எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Related posts