இந்த புகைப்படத்தையும் சரி… இந்த ஜோடியையும் சரி… நெட்டிசன்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. கடந்த ஆண்டு அதிக அளவில் வைரலான புகைப்படங்களில் முக்கியம் இடம் இந்த ஃபோட்டோவுக்கும் உண்டு.
கர்நாடக மாநிலம் துமகூரின் அக்கிமரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (45) என்பவர், மோகனா எனும் 25 வயது இளம் பெண்ணை கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமண கோலத்தில் இவர்கள் எடுத்த புகைப்படம் இந்தியா முழுக்க வைரலானது. இதனால், சங்கரப்பா ஒரு பிரபலமாகவே உருவெடுத்தார்.

தன்னை விட 20 வயது குறைவான இளம் பெண்ணை திருமணம் செய்ததால், இவரை விமர்சித்து அதிக அளவு கமெண்ட்டுகள் குவிந்தன. ஆண்கள், பெண்கள் என பலரும் இவரை விமர்சித்தனர். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத சங்கரப்பா, தனது இளம் மனைவியுடன் இனிதாக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
தான் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை வெளிக்காட்ட, தனது மனைவியுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்து ஆட்டம், பாட்டம் போடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். அதற்கும் பலரும் இவரை ட்ரோல் செய்தனர்.

ஆனால், கடந்த சில மாதங்களாக அவரது குடும்பத்தில் அதிகளவில் பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, அவருடைய தாயாருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி கடுமையான சண்டை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று (மார்ச்.29) காலை அவரது தோட்டத்தில் துாக்கிட்ட நிலையில் சங்கரப்பா சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து, ஹுலியாரு துர்கா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரப்பா தற்கொலை குறித்து அவரது மனைவி மோகனா கூறுகையில், “நானும், என் கணவரும் நன்றாக தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் என் மாமியார் 15 நாளுக்கு ஒரு முறை என்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். என் தாய், தந்தையுடன் கூட அவர் பேச விடவில்லை.
இப்படி தினம் தினம் சண்டை நடப்பதால் எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை என்று கணவர் கூறியபோது, ‘அப்படி வாழ முடியவில்லை என்றால் ‘செத்து போ’ என்று என் கணவரை மாமியார் திட்டினார். இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. காலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்தது. நான் இப்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளேன் என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.
போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.