மனித சமூகங்களை வலிமைப்படுத்துவதில் தக்க பங்களிப்பினை அளித்து, பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு உலகளாவிய “சமுதாய ஆஸ்கர் விருது” (Community Oscar Awards) கடந்த 10 வருடங்களாக அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 11ஆவது உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பிரிவுகள் கொண்ட இந்த பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டிருக்கிறார்.
இந்த கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெருமை தாக்கத்தை ஏற்படுத்திய “ஜெய்பீம்” படத்தின் தயாரிப்பாளர்களான சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகாவுக்கு 2021-ன் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை மையப்படுத்தி வெளியான ஜெய் பீம் படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
அதேபோல, தமிழ்நாட்டின் சென்னை சேப்பாக் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும், திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ் சினிமா நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021′ (International Rising Star of the Year) என்ற பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் வளர்ந்து வரும் இளம் தலைவர்களின் சிறந்த பணியை ஆராய்ந்து அதனடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறதாம். அதன்படி உதயநிதிக்கு இந்த சமுதாய ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்ரவரி 19ம் தேதி இலினொய்ஸ் (illinois) மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெறுகிறது.