தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு தலைமைச்செயலகம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சத்தை வழங்கினார். புதிதாக முதல்வராக பொறுப்பேற்றதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பதிலளித்து பேசினார்.
தமிழ்நாட்டிலிருந்து கொங்குநாடு பிரிக்கப்படுமா என்பது தொடர்பாக கேட்டபோது, “ராம்நாடு, ஒரத்தநாடு என்றெல்லாம் இருக்கு அதற்காக எல்லாவற்றையும் பிரித்தால் அவ்வளவுதான். நல்லாருக்க தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்? இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது” என்று கலகலப்புடன் கருத்து தெரிவித்தார்.
மேலும் புதிதாக அமைந்துள்ள அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சிறப்பாக பணியாற்றுவதாகவும் பொற்கால ஆட்சி என்றும் புகழ்ந்து பேசினார்.
தனது படத்தில் வரும் ஓரு ஊசி போடுவது தொடர்பான நகைச்சுவையை எடுத்துக்காட்டாக கூறி அது போலெல்லாம் பேசாமல் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் விரைவில் திரைப்படம் மற்றும் OTT இணையதளங்களில் நடிக்க வாய்ப்புகளுக்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தெரிவித்தார்.