TamilSaaga

சிங்கப்பூர் மச்சினனுக்கு ஆசைப்பட்டு எதுவும் அறியாத தங்கையின் வாழ்க்கையையே வீணடித்த “சகோதரன்” – தப்புக் கணக்கால் ஒரு குடும்பமே சிரித்து 4 வருஷமாச்சு!

“வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் மாப்பிள்ளை” is a sentence.. “சிங்கப்பூரில் வேலைப்ப்பார்க்கும் மாப்பிள்ளை” is an emotion என்பது எத்தனை உண்மை என்பது இங்கு நிரூபணமாகியுள்ளது. பையன் சிங்கப்பூரில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார் ஒருவர்.

இதுகுறித்து நமது “தமிழ் சாகா சிங்கப்பூர் Exclusive” தளத்துக்கு வினோத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அளித்த பேட்டி இது. இனி அவரது வார்த்தைகளாக…

“வணக்கம் சார்.. என் பேரு வினோத்.. ஊரு திண்டுக்கல். சில விஷயங்களை பகிர்ந்துக்குறது மூலமா நல்லது நடக்கும்ங்குற நம்பிக்கையில இதை சொல்றேன். உங்க “Exclusive” செய்திகள் நிறைய படிச்சிருக்கேன். அதுல நிறைய செய்தி Motivational-ஆ, பயனுள்ளதா இருந்திருக்கு. அந்த நம்பிக்கையில் தான் உங்களை தொடர்பு கொண்டு இதை சொல்றேன்.

நானும் என் நண்பன் சரவணனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திண்டுக்கல்ல ஒண்ணா படிச்சு, ஒண்ணா வளர்ந்தோம். பக்கத்து பக்கத்து வீடு தான். ரொம்ப நல்லவன். அதிகம் பேச மாட்டான். ஆனால், ஒரே பிரச்சனை பிடிவாதம். நாங்க நண்பர்கள் கூட அவனிடம் வெறுக்கும் விஷயம் அது ஒண்ணு மட்டும் தான்.

அவனுக்கு ஒரு விஷயம் சரின்னு பட்டுடுச்சுன்னா, அதை அந்த கடவுளே வந்து சொன்னாலும் தன் நிலையை மாத்திக்கமாட்டான். படிப்பு முடிச்சிட்டு நாங்க எல்லோரும் சென்னையில வேலைக்கு ஏற்பாடு செஞ்சு, ஒவ்வொருத்தரா கிளம்பிகிட்டு இருந்தோம். எங்க நண்பர்கள் ஒவ்வொருத்தரும் 40,000 , 50,000-னு நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைச்சு போனாங்க.

ஆனால், சரவணன் மட்டும் சொந்த ஊரிலேயே தொழில் செய்யப் போறேன்னு சொன்னதும், அவனோட அப்பா, அம்மா உட்பட எல்லோரும் அதிர்ச்சி ஆகிட்டோம். அவனோட அப்பா EB-ல ஒரு சாதாரண ஊழியர். அவன் குடும்பத்துக்கும், பிஸ்னஸ்-க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சம்பந்தத்தை விடுங்க… தொழில் தொடங்க முன்பணம் கூட அவங்ககிட்ட கிடையாது. அப்படியிருக்க, சரவணன் ‘நான் ஊருலயே பிஸ்னஸ் பண்ண போறேன்னு’ சொன்னா யார் தான் அதிர்ச்சி ஆக மாட்டாங்க?

மேலும் படிக்க – சிங்கப்பூர்.. தலையில் Steel Beam விழுந்து தொழிலாளர் பலி – சிங்கையில் ஒரே நாளில் இறந்த “2 வெளிநாட்டு ஊழியர்கள்” – ஏப்ரல் மாதத்தில் மட்டும் 7 பேர் பலி

ஆனால், அவன் விடாப்பிடியாய் நின்னான். ஒவ்வொரு பேங்க்கா படியேறினான். சுய தொழில் தொடங்க லோனுக்கு அப்ளை பண்ணிக்கிட்டே இருந்தான். நாங்க சென்னையில் வேலைக்கு அப்ளை பண்ணா, இவன் பேங்க்ல லோனுக்கு அப்ளை பண்ணிட்டு இருந்தான். 8 மாத போராட்டத்துக்கு பிறகு, அவனுக்கு லோன் கிடைக்க, பிரவுஸிங் சென்ட்டர் ஓப்பன் பண்ணான்.

தொடக்கத்துல சுமாரா போனாலும், இப்போ மாதம் 40 ஆயிரத்துல இருந்து, 70 ஆயிரம் வரை சம்பாதிக்கிறான். நாங்க, மத்தவங்களுக்காக வேலை செஞ்சு அவனை விட கம்மியா சம்பாதிக்கிறோம். ஆனா, அங்க அவன் தான் ஓனர்.. அவன் தான் தொழிலாளியும். இதனால, அவன் வீட்டுல அவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம மரியாதை கொடுத்தாங்க. சரவணனோட அப்பாவே அவன்கிட்ட கேட்டுத் தான் எந்தவொரு விஷயமா இருந்தாலும் செய்வார்.

ஆனாலும், எங்ககூட அதே கிளாஸ்மேட் சரவணனா, எப்போதும் அதே நட்போட பழகினான். பட்.. அப்போ கூட அவன் பிடிவாத குணம் மாறவேயில்ல. அதுக்கு பதிலா இன்னும் 10 மடங்கு அதிகமாத்தான் இருந்துச்சு.

அதுக்கான விளைவை அவன் தன் தங்கச்சி மூலமா அனுபவிச்சான். சரவணனுக்கு ஒரு தங்கை இருக்காங்க. அவனை விட 2 வயசு கம்மி. அவன் என்ன சொன்னாலும் அதை மீற மாட்டாங்க. அது அண்ணன் மேல உள்ள பயமா, பாசமா-னு எனக்கு தெரியல. ஆனா, அண்ணன் ஒன்னு சொல்லிட்டாருன்னா அதுதான் அவங்களுக்கு வேதவாக்கு.

அப்போ அந்த பொண்ணுக்கு தீவிரமா வீட்டுல மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க. இந்த பெண் பார்க்கும் படலத்துல சரவணனோட முதல் உத்தரவே, மாப்பிள்ளை உள்ளூரா இருக்கக் கூடாது-ங்குறது தான். வேற ஏதாவது ஒரு மாவட்டமா இருக்கணும்.. குறிப்பா வெளிநாட்டுல வேலை பார்க்குற மாப்பிள்ளையா இருக்கணும்-னு இத்தனை கண்டிஷன் போட்டுத் தான் மாப்பிள்ளை தேடினாங்க.

அதுக்கு காரணம்.. உள்ளூரில் இவங்க ரொம்ப ரொம்ப சாதாரண குடும்பம். அவங்களோட பொருளாதார நிலை என்னன்னு பலருக்கும் தெரியும். இதனால பெரிய இடத்துல சம்பந்தம் பண்ண முடியாதுன்னு நினைச்சான். வெளியூருன்னா எப்படியாவது ஒரு நல்ல வசதியான வரனா பார்க்க முடியும்-னு நினைச்சான். தன்னோட சம்பாத்தியத்தை முன்னிலைப்படுத்தி ஒரு வசதியான வரன் பிடிக்கணும்-ங்குறது தான் அவனோட இலக்கு. இது எங்க நண்பர்கள் வட்டாரத்துல எல்லோருக்கும் தெரியும்.

அந்த சமயத்துல தான், சேலத்துல இருந்து ஒரு வரன் வந்தது. அதுவும், சரவணனோட தொழில் ரீதியா நட்பில் இருக்கும் ஒருவர் மூலமா அந்த வரன் வந்துச்சு. பையன் சிங்கப்பூர்-ல பெரிய கம்பெனியில பெரிய பொறுப்புல இருக்குறதாகவும், ஆனா அவங்க குடும்பம் பொருளாதார ரீதியா இப்போதான் முன்னேறிக்கிட்டு இருக்காங்க-ன்னும் சொன்னாங்க. அதாவது, அந்த பையன் தான் தலையெடுத்து நல்ல வேலைக்கு போய் இப்போ அந்த குடும்பத்தை முன்னேற்றிக் கொண்டு இருக்காருன்னு சொன்னாங்க.

சரவணனுக்கு அந்த வரன் ரொம்ப பிடிச்சுப் போச்சு.. வசதியான வீட்டுல சம்பந்தம் பேசணும்-னு முதல்ல நினைச்சவன்.. இப்போ வேற மாதிரி கணக்கு போட ஆரம்பிச்சான். அதாவது, பையன் சிங்கப்பூருல நல்லா சம்பாதிக்கிறார்.. ஆனா குடும்பம் ஏழ்மையான குடும்பம்.. அப்போ மச்சினன் உட்பட எல்லோரும் அவன் கட்டுப்பாட்டில் இருப்பாங்கன்னும், தன் பேச்சுக்கு அந்த வீட்டுலையும் மறுபேச்சு இருக்காது-ன்னு கணக்கு போட்டான்.

வழக்கம் போல… சரவணன் வீட்டுல அவன் சொன்ன எல்லா விஷயத்துக்கும் தலையாட்டுனாங்க. கல்யாண பேச்சு எல்லாம் சுமூகமாக முடிய, தேதி நிச்சயமாச்சு. ஆனா, ஒரேயொரு விஷயம் என்னன்னா, அந்த பையன் 3 வருஷமா ஊருக்கே வராம இருந்திருக்கார். அவர் பெரிய பொறுப்புல இருக்குறதால ஊருக்கு வர முடியலை-ன்னு அவங்க வீட்டுல சொன்னாங்க. அதே மாதிரி மாதம் 2 லட்சம் சம்பளம்-னு சொன்னாங்க. ஆனா, அந்த சம்பாத்தியத்துக்கு ஏற்ற எதுவும் அந்த வீட்டுல தென்படல. பட்.. இதையல்லாம் சரவணன் பெருசாவே எடுத்துக்கல. ‘பையன் இப்போதான் சம்பாதிக்க ஆரம்பிச்சு இருக்கார்’-னு அவனே தன்னை சமாதானப்படுத்திக்கிட்டான்.

மேலும் படிக்க – பல கனவுகளோடு வெளிநாடு சென்ற தமிழக தொழிலாளர்.. எதிர்பாராத வகையில் உயிரிழந்த பரிதாபம் – பல நல்ல உள்ளங்கள் உதவியால் திருச்சி வந்தடைந்த உடல்!

ஆனா, எங்க நண்பர்கள் அவன்கிட்ட கொஞ்சம் யோசிச்சு இந்த விஷயத்துல முடிவு எடுக்கலாம்-னு சொன்னாங்க. அதை அவன் காது கொடுத்து கூட கேட்கல. என் நண்பர்களில் ஒருவன், அந்த பையன் சிங்கப்பூரில் எந்த கம்பெனியில் வேலை பார்க்குறார் என்கிற விவரத்தை கேளு-ன்னு சரவணன் கிட்ட சொன்ன போதும், ‘ம்.. கேட்குறேன்’ என்று சொன்னவன் அதன் பிறகு அதை கண்டுகொள்ளவில்லை. அவனைப் பொறுத்தவரை அவனது பிஸ்னஸ் பார்ட்னர் சொன்ன வரன் இது.. கண்டிப்பா நல்லா தான் இருக்கும்.. அதுமட்டுமின்றி, தன் பேச்சுக்கு கட்டுப்படும் அளவுக்கான வரன் என்பதால், அவன் எந்த குறையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை தான் என் மச்சினன்’ என்பதுல உறுதியா இருந்தான்.

எங்க நண்பர்கள் எல்லார்கிட்டயும் ஃபோன் பண்ணி, “கல்யாண வேலைக்கு ஹெல்ப்புக்கு நீங்க தாண்டா இருக்கீங்க”-னு உரிமையோட சொன்னான். என்னைத்தவிர எல்லோரும் கல்யாணத்துக்கு 3 நாளைக்கு முன்னாடியே ஊருக்கு போய், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சாங்க. நான் மட்டும் போகல!.

சரியா கல்யாணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னாடி தான் மாப்பிள்ளை ஊருக்கே வந்தார். லீவு கிடைக்கல -ன்னு சொன்னாங்க. கல்யாணமும் முடிஞ்சது. எந்தவொரு விஷயத்துக்கும் ஒரு பைசா கூட செலவு செய்யாதவன், 40 ஆயிரம் செலவு செஞ்சு ஹனிமூன் அனுப்பி வச்சான். கல்யாணம் முடிஞ்சு 10 நாளாச்சு, 20 நாளாச்சு… 30 நாளாச்சு.. 3 மாசமாச்சு.. மாப்பிள்ளை மீண்டும் சிங்கப்பூர் போறதை பற்றி வாயே திறக்கல. சரவணனுக்கோ ‘நாமளா போய் எப்படி கேட்குறதுனு’ தயக்கம். அப்பறம் ஒருவழியா தங்கச்சியை விட்டே கேட்டான். அதுக்கு மாப்பிள்ளை, ‘நான் 6 மாசம் லீவுல வந்திருக்கேன்’.. இன்னும் 3 மாதம் டைம் இருக்குன்னு’ சொல்லிருக்கார். இதுக்கிடையில, அந்த பொண்ணு மாசமாக, குடும்பத்துல எல்லோருக்கும் ஏக சந்தோசம்.

ஆனால், மருத்துவ செலவுக்கு மருந்துக்கும் கூட மாப்பிள்ளை ஒரு பைசா கூட செலவு செய்யல. எல்லா செலவும் சரவணன் தான் செஞ்சான். முதல் பிரசவம் பெண் வீட்டில் தான் பார்ப்பாங்க என்பதால், அவனும் அதை பெருசா எடுத்துக்கல. இருந்தாலும் ஒரு பேச்சுக்கு கூட அந்த மாப்பிள்ளை பர்ஸை கூட கண்ணுல காட்டல. இதுக்கிடையில அவர் சொன்ன 6 மாத டைம் முடிஞ்சு போக, அப்போதும் அந்த மாப்பிள்ளை ‘மனைவி பிரசவம்-ங்குறதால இன்னும் 3 மாதம் லீவு கேட்டிருக்கேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஒருபக்கம் கட்டுக்கடங்காத செலவு, மறுபக்கம் வேலைக்கு போறத பற்றி வாயே திறக்காத மாப்பிள்ளை என்று எதையும் வெளியே சொல்ல முடியாமல் புழுங்கிய சரவணன், ஒருநாள் எங்களுக்கு ஃபோன் பண்ணி, ரொம்ப கவலையோட பேசினான். அப்போ கூட அவன் தன் மச்சினன் பற்றி ஒரு வார்த்தை கூட தப்பா பேசல. நாங்களா நோண்டி நோண்டி எல்லாத்தையும் கேட்ட பிறகு தான் ஒவ்வொன்னா சொன்னான். அப்போ, 8 மாதமா மாப்பிள்ளை லீவுல இருக்குறதையும் சொன்னான். அப்பவே எங்களுக்கு புரிஞ்சுபோச்சு.. இதுல ஏதோ தவறு இருக்குன்னு…

எங்கள் நண்பன் அரவிந்த் என்பவனின் உறவினரும் சிங்கப்பூரில் தான் வேலை செய்கிறார். அவரிடம் நாங்கள் இந்த விஷயத்தை பகிர்ந்த போது, அவர் ‘ஏம்பா.. ஒருத்தன் 6 மாசம் லீவுல வந்திருக்கன்னு சொல்லி இருக்கான். எந்த கம்பெனியிலபா சம்பளத்தோட 6 மாசம் லீவு கொடுத்து அனுப்புறாங்க? அதுவும் சிங்கப்பூருல… அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல.. ஒன்னு அந்த பையன் இங்க வேலையை விட்டுட்டு வந்திருக்கணும்.. அப்படி இல்லனா, இங்க அந்த பையன் வேலையே பார்க்கலைனு தான் அர்த்தம். எந்த சிங்கப்பூர் முதலாளியும், 6 மாதம் லீவு கொடுத்து தொழிலாளியை ஊருக்கு அனுப்பி வைக்க மாட்டான். மேற்கொண்டு மனைவி கர்ப்பமா இருக்குறதால எக்ஸ்ட்ரா 3 மாதம் லீவு கேட்டிருக்கேன்-னு சொன்னதெல்லாம் வேற லெவல் காமெடிப்பா’ என்று சொல்ல எங்களுக்கு தூக்கிவாரி போட்டுவிட்டது.

சரவணனிடம் தயங்கி தயங்கி இந்த விஷயத்தை சொன்னோம். அப்போது அவன் ரொம்ப ஆத்திரப்பட்டான். என் மச்சினனை பற்றி என்கிட்டையே குறை சொல்றீங்களா? என்று கோபப்பட்டு ஃபோனை வச்சிட்டான். அதன் பிறகு ஒரு வாரத்துக்கு எங்களுக்குள் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. அந்த பிறகு ஊருக்கு போன எங்கள் நண்பன் ஒருவன் சொன்ன விஷயம் எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எங்களது கடைசி conversation-க்க பிறகு மனது கேட்காமல் நேரடியாகவே மச்சினனிடம் சென்று எல்லா விவரங்களையும் கேட்டிருக்கிறான். அந்த பையனோ, எல்லாவற்றையும் முன்னுக்குப்பின் முரணாக சொல்ல, ஒருகட்டத்தில் கைக்கலப்பு வரை சென்றுவிட்டது. அதன் பிறகு தான் உண்மை தெரிய வந்தது. அந்த பையன் சிங்கப்பூரிலேயே வேலைப்பார்க்கவில்லை என்று. சென்னை அம்பத்தூரில் வேலை செய்து வந்த உண்மையும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, கல்யாணத்துக்கு சில மாதத்துக்கு முன்னாடியே அந்த பையன் அந்த வேலையையும் விட்டுவிட்டதாக தெரிய வந்தது.

இந்த வரனை சரவணனிடம் கொண்டு வந்த பிஸ்னஸ் பார்ட்னரிடம் கேட்ட போது, அவரோ சிம்பிளாக ‘அவர்கள் எனக்கு தெரிந்த குடும்பம் கிடையாது. வேறொரு நண்பர் மூலமாக தெரிய வந்த வரன் தான். நீங்கள் தான் அவர்களைப் பற்றி விசாரித்திருக்க வேண்டும். சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று சொன்னதும் கண்ணை மூடிக்கொண்டு தங்கச்சியை கட்டி வச்சுட்டு இப்போது என்ன வந்து எதுக்கு கேட்குறீங்க?” என்று நறுக்கென கேட்டதும் அப்படியே உட்கார்ந்துவிட்டான்.

மாப்பிள்ளை எந்த கம்பெனியில் வேலை செய்கிறார்? என்று நண்பர்கள் கேட்டதையும் அவன் மதிக்கவில்லை.. கொஞ்சம் நிதானமா முடிவெடுக்கலாம் என்று சொன்னதையும் மதிக்கவில்லை. அவனாக ஒரு கணக்கு போட்டுக் கொண்டு, தன் பேச்சுக்கு அனைவரும் ஆட வேண்டும் என்று நினைக்க, இன்று அந்த பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.

இதுபற்றி அந்த பையனின் பெற்றோரிடம் கேட்ட போது, “கல்யாணம் செய்து வைத்தால் சரியாகிடுவோம் என்று நினைத்தோம்” என காலில் விழாத குறையாக உருண்டு பெரண்டு அழுதனர். இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப் போகிற நேரத்தில் இப்படியொரு பூகம்பம் தலையில் இறங்கியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. போலீஸிடம் புகார் கொடுக்கலாம் என்று நினைத்தால், என் பிள்ளை அப்பா இல்லாம வளரணுமா? என்று அவன் தங்கை கேட்டு அழ, அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

இப்போது, அவர்களது குழந்தைக்கு வயது 4. அதன் பிறகாவது அந்த பையன் உருப்புடுவான் என்று பார்த்தால், அதிலும் ஏமாற்றம் தான். நல்ல வேலை எதுவும் கிடைக்காமல் தற்போது ஒரு ஒயின்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். குழந்தைக்கு செலவு செய்ய கூட முடியவில்லை. அந்த பெண்ணோ, இனியும் அந்த நபரோடு வாழ விருப்பமில்லை என்று சொல்லி குழந்தையுடன் தன் வீட்டிற்கே வந்துவிட்டார்.

அதன் பிறகு சரவணன் சிரித்து நாங்கள் ஒருமுறை கூட பார்க்கவில்லை. இவ்வளவு விஷயத்தையும் இப்போது நான் ஏன் சொல்கிறேன் என்றால், சரவணனின் தங்கையை நான் காதலித்தேன். (இதை அவர் சொன்ன போது நமது தமிழ் சாகா குழுவே அதிர்ச்சியானது!). அந்த பெண்ணுக்கும் இது தெரியும். அவள் என்னை விரும்புவதாக ஒருமுறை கூட சொன்னதில்லை. ஆனால், என்னை பிடிக்கும். நல்ல வேலைக்கு சென்ற பிறகு, உரிமையுடன் சென்று பெண் கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். இதனை அந்த பெண்ணிடமும் கூறினேன். அதற்கு அவள், ‘நீங்க பொண்ணு கேட்டு, அண்ணன் ஓகே சொன்னா.. எனக்கும் ஓகே தான் என்றாள்”. ஆனால், அதன் பிறகு சரவணன் வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டும் என்று எடுத்த முடிவால் அந்த நொடியே மனதால் நாங்கள் பிரிந்தோம்.

அட்லீஸ்ட், அவளை கல்யாணம் செய்யப்போகும் நபராவது அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எல்லாம் தலைகீழாக போக, இப்போது குழந்தையுடன் தனியாக தவித்து வருகிறாள். இப்போது கூட, அவளை அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால், தான் ஏமாற்றப்பட்ட கோபத்தில் இருக்கும் சரவணனிடம் எப்படி இதைச் சொல்வது என்று தயங்குகிறேன். நல்லது நடக்கும்-னு நம்புறேன் சார்” என்று வினோத் உருக்கமுடன் முடித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts