சிங்கப்பூரில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சிங்கப்பூரின் பொருளாதாரம் ஆண்டுக்கு 14.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொரோனா காரணமாக பல வர்த்தக நடவடிக்கைகள் தடைப்பட்டதால் சிங்கப்பூரின் பொருளியல் பெரிய அளவில் வீழ்ச்சியை கண்டதும் நினைவுகூரத்தக்கது.
மேலும் தொழில்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2019 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் காணப்பட்ட தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட 0.9 சதவீதம் குறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் சிங்கப்பூரை பொறுத்தவரை உற்பத்தி என்பது கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஆண்டுக்கு 18.5 சதவீதம் அதிகரித்துள்ளது, முந்தைய மூன்று மாதங்களில் அது 11.3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் இருந்துவந்த நேரத்தில் சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் மிக மோசமான மந்தநிலையில் கடந்த ஆண்டு பதிவானது. நாட்டின் பொருளாதாரம் 5.4 சதவிகிதத்திற்கு சுருக்கிய நிலையில், தற்போது சிங்கப்பூரின் பொருளாதாரம் இந்த ஆண்டு படிப்படியாக முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.