TamilSaaga

“இனி பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம்” : சிங்கப்பூர் Cheers மற்றும் FairPrice Xpress நிறுவனங்கள் அறிவிப்பு

சிங்கப்பூரில் உள்ள அனைத்து 167 Cheers மற்றும் FairPrice Xpress கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் பைகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NTUC FairPrice நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட FairPrice பல்பொருள் அங்காடிகளில் (ஏற்கனவே பிளாஸ்டிக் பைக்கு கட்டணம் வசூலிக்கும் கடைகளில்) பிளாஸ்டிக் பைக் கட்டணம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பல்பொருள் அங்காடிகளின் பட்டியல் பின்வருமாறு : Hougang One மற்றும் Kallang Wave Mallல் உள்ள FairPrice Xtra விற்பனை நிலையங்கள், FairPrice Finest outlets, Zhong Shan Park, Paya Lebar Quarter, Changi Airport Terminal 3, Funan, Bukit Timah Plaza மற்றும் Valley Point, மற்றும் Coronation Plaza, Tai Seng-ல் உள்ள FairPrice விற்பனை நிலையங்கள் ஆகியவை ஆகும். பல்பொருள் அங்காடிகள் மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோர்களில் பிளாஸ்டிக் பைகள் முறையே 0.20 வெள்ளி மற்றும் 0.10 வெள்ளிக்கு விறபனையாகும்.

தேசிய பூங்கா வாரியத்தின் OneMillionTrees இயக்கத்திற்கு 1,80,000 வெள்ளி பங்களிப்பு உட்பட பசுமை முயற்சிகளை ஆதரிப்பதற்காக இந்த அனைத்து வருமானமும் செல்லும் என்று NTUC FairPrice தெரிவித்துள்ளது. இந்த பங்களிப்பு 600 மரங்களை நடுவதற்கும், இயற்கை மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கும் நிதியளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மளிகை சில்லறை விற்பனையாளர் FairPrice முதன்முதலில் நவம்பர் 2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக் பைக் கட்டணத்தை அறிமுகப்படுத்தினார். தற்போது 24 கடைகளில் இந்த கட்டணம் அமலில் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த முயற்சியின் மூலம் 30 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை சேமித்துள்ளது. 10 வாடிக்கையாளர்களில் ஏழு பேர் தங்கள் சொந்த பைகளை கொண்டு வர தயாராக உள்ளனர் என்று NTUC FairPrice தெரிவித்துள்ளது.

Related posts