ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த சில வருடங்களாக அமெரிக்க படைகள் திரும்பப் பெற்று வரப்படும் நிலையில் தலிபான் தங்களது ஆதிக்கத்தை ஆப்கானிஸ்தான் நாட்டில் பெரிய அளவில் செலுத்தி வந்தனர். பெரிய அளவில் தாக்குதல்களையும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் நடத்தி வந்த நிலையில் தற்பொழுது அந்த நாட்டின் பெரும்பாலான மாகாணங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தலிபான்கள் அண்மையில் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய தலைநகரமும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமான கந்தகாரையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதனையடுத்து தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் தொடர்ந்து முன்னேறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடைய இந்த முன்னேற்றத்தை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்கமுடியவில்லை என்று தகவல்கள் வெளியானது.
மேலும் காபூல் நகரில் தற்பொழுது தாலிபன்கள் நுழைந்துள்ள நிலையில் அவர்கள் சண்டையிட விரும்பவில்லை என்றும், சமாதான முறையில் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாகவும் தலிபான் அமைப்பு தகவல் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலையும் கைப்பற்றி நாட்டின் அதிகாரத்தை தலிபான் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து அங்கு இடைக்கால தலைவராக அலி அகமது நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் தற்பொழுது அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்டு நாட்டிற்கு அழைத்து வரும் நோக்கில் இந்தியாவின் மத்திய அரசு இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் துணை அதிபரும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்க உருவானதே தலிபான் அமைப்பு. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருதல், ஆயுதங்களை கைவிடுதல் மற்றும் தியோபந்தி கருத்துக்களின் அடிப்படையில் ஷ்ரயா சட்டத்தை அமல் படுத்துவது என்ற மூன்றும் தான் தலிபான்களின் முக்கிய கோட்பாடு என்று கூறப்படுகிறது.