சிங்கப்பூரில் டெல்டா உட்பட நான்கு வகையான வைரஸ்களை இலக்காகக் கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய இரண்டு பெருந்தொற்று தடுப்பூசிகளுக்கான உள்ளூர் மருத்துவ பரிசோதனைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப கட்ட மருத்துவ சோதனை, சுகாதார அறிவியல் ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகைகளுக்கு எதிரான தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையும், தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு சாத்தியமான பூஸ்டர் தடுப்பூசிகளையும் மதிப்பீடு செய்யும். மேலும் இந்த தடுப்பூசிகள் Arcturus Therapeutics என்ற மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சோதனை 21 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான ஆண் மற்றும் பெண் தன்னார்வலர்களை நியமிக்க விரும்புகிறது. மேலும் இது சிங்ஹெல்த் இன் இன்வெஸ்டிகேஷனல் மெடிசின் யூனிட் மூலம் நிர்வகிக்கப்படும், இது இணை பேராசிரியர் ஜென்னி லோ தலைமையிலானது என்பதும் நினைவுகூரத்தக்கது.
இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன், இந்த சோதனை இரண்டாம் கட்டத்திற்கு செல்லும். இதில் பங்கேற்பாளர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மையமாக வைத்து கூடுதலான மக்களிடம் இது செயல்படுத்தப்படும்.