TamilSaaga

சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொறுப்பேற்கிறார் திரு.லாரன்ஸ் வோங்

சிங்கப்பூர் : சிங்கப்பூரின் புதிய பிரதமராக மே 15ம் தேதியன்று திரு.லாரன்ஸ் வோங் பதவியேற்க உள்ளதாக சிங்கப்பூர் அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர் தற்போது சிங்கப்பூரின் துணை பிரதமராக இருந்து வருகிறார்.

சிங்கப்பூரின் பிரதமராக தற்போது திரு.லீ கிசின் லூங் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் மே 15ம் தேதியன்று நிறைவடைகிறது. அன்றைய தினம் சிங்கப்பூரின் புதிய பிரதமராக திரு.லாரன்ஸ் வோங் பதவியேற்றுக் கொள்ள உள்ளார். இந்த தகவலை ஏப்ரல் 15ம் தேதி சிங்கப்பூரின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் தலைமை பொறுப்பு மூன்றாம் தலைமுறையினரிடம் இருந்து நான்காம் தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 15ம் தேதியன்று இரவு 8 மணிக்கு இஸ்தானாவில் நடைபெறும் விழாவில் துணை பிரதமராக இருக்கும் திரு.லாரன்ஸ் வோங் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்றுக் கொள்ள உள்ளார். இவர் 13 ஆண்டு காலமாக அரசியலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் புதிய பிரதமராக திரு.லாரன்ஸ் வோங் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் வீடியோ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2011ம் ஆண்டு நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் ஒரு போது சிங்கப்பூரின் பிரதமராக ஒரு நாள் சேவையாற்றுவேன் என எதிர்பார்த்தது கிடையாது. மனித நேயத்துடன் இந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய கடமைகளை ஆழ்ந்த கவனத்துடன் மேற்கொள்வேன். என்னுடைய முழு பங்களிப்பையும் இதற்காக அளிப்பேன் என உறுதி அளிக்கிறேன். என்னுடைய ஆற்றலின் ஒவ்வொரு அவுன்சையும் இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை ஆற்றுவதற்காக அர்ப்பணிப்பேன். உங்களின் கனவுகள் என்னுடைய செயல்களுக்கு காரணமாக இருக்கும். உங்கள் மீதான அக்கறைகள் என்னை சரியான முடிவு எடுக்க வழி நடத்தும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் லீ தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில், “தலைமை பதவி மாற்றம் என்பது எந்த நாட்டிற்கும் மிக முக்கியமான தருணமாகும். லாரன்ஸ் மற்றும் நான்காம் தலைமுறை அரசியல் குழு கடுமையாக பாடுபட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில். சிங்கப்பூரை முன்னெடுத்து செல்ல அவர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். அவர்கள் பல சிங்கப்பூர் நாட்டவர்களுடன் பணியாற்றி சமூக புத்துயிர் பெற பாடுபட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சியே புதிய தலைமுறையின் முக்கிய கொள்கையாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

துணை பிரதமர் திரு.லாரன்ஸ் வோங் மற்றும் அவரது அணிக்கும் முழு ஆதரவையும் அளித்து நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டும் என சிங்கப்பூர் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் பிரதமர் லீ கேட்டுக் கொண்டுள்ளார்.

51 வயதாகும் திரு.லாரன்ஸ் வோங் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே பேச்சுக்கள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மக்கள் நடவடிக்கை கட்சியின் நான்காம் தலைமுறை அணி மூலம் துணை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts