TamilSaaga

கணவருக்கு கிட்னி ஃபெயிலியர்.. துணிச்சலாக சிங்கப்பூர் செல்ல எடுத்த முடிவு.. வறுமையை தன்னந்தனியாக விரட்டிய பெண் – பூவாய் இருந்து புயலாய் மாறிய ஒரு தென்றல்!

ஒரு பெண் எப்படி குடும்பத்தை சுமக்கிறார் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு உதாரணம். ஆம்! நமது தமிழ் சாகா சிங்கப்பூரின் “exclusive” குழுவுக்கு சிங்கப்பூரில் இருந்து பேட்டி அளித்துள்ளார் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண். இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக…

“முதலில் இப்படியொரு வாய்ப்பு வழங்கிய தமிழ் சாகா குழுவுக்கு எனது வாழ்த்துகள்.. என்னுடைய பெயர் கவிதா. எனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை உங்களுடன் பகிர்வதன் மூலம், யாராவது ஒருவருக்கு உந்துதலாக அமைந்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள் நான். 19 வயதிலேயே வீட்டில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் கூலி வேலை பார்க்கிறார். 2 மகன்கள் எனக்கு. மூத்தவன் 5ம் வகுப்பு படிக்கிறான். இளையவன் 1ம் வகுப்பு. ரெண்டு பசங்களும் ஊரில் தான் இருக்காங்க.

எனது கணவரின் வருமானம் எங்கள் இவருக்கே போதாமல் இருந்தது. இதனால் பிள்ளைகளை வளர்க்க ரொம்பவே சிரமப்பட்டோம். குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சனை வேறு. இதனால் கணவருடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. ஆனால், அவர் ரொம்ப நல்லவர். குடி, சிகரெட் என்று எந்த பழக்கமும் கிடையாது. வேலைக்கு போவது, வீட்டுக்கு வருவது என்று இருப்பவர். ஆனால், அதைத்தாண்டி அவரால் பெரிதாக வருமானம் ஈட்ட முடியவில்லை.

இந்த சூழலில் தான் வெளிநாடு சென்று சம்பாதிக்கலாம் என்று இருவரும் பேசி முடிவெடுத்தோம். பிறகு, கையில் இருந்த பணத்தை போட்டு, இருந்த ஒரேயொரு நிலத்தையும் விற்று சிங்கப்பூர் செல்ல ஏற்பாடு செய்தோம். எல்லாம் சுமூகமாக அமைந்தது. அந்த நேரத்தில் தான் தலையில் இடி ஒன்று இறங்கியது. ஒருநாள் இரவு திடீரென வயிறு வலிக்கிறது என்று துடிக்க ஆரம்பித்துவிட்டார். பதறியடித்து மருத்துவமனை சென்று பார்த்தால், அவருடடைய கிட்னி இரண்டு பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டார்கள். அந்த நொடியை இப்போது நினைத்தாலும் எனக்கு நடுக்கம் வருகிறது.

சிங்கப்பூர் செல்ல தயார் செய்த பணம் முழுவதையும் அவரது சிகிச்சைக்கே செலவு செய்தோம். மேற்கொண்டு கடனும் வாங்கினோம். ஒருவழியாக அவரை காப்பாற்றி வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டோம். ஆனால், இப்போது உலகமே இருளாக தெரிந்தது. எங்கள் வீட்டிலோ கொடுத்து உதவ வசதியில்லை. அவரது வீட்டின் நிலைமை அதைவிட மோசம். கடன் கழுத்தை நெரிக்க வேறு வழியின்றி நானே சிங்கப்பூர் செல்வது என்று முடிவு செய்தேன்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் 3 குழந்தைகளை தவிக்கவிட்டுச் சென்ற ஊழியர்.. கடமையே கண்ணாக இருந்து கடைசி நேரத்தில் உயிரை விட்ட சோகம்!

என் கணவர் அதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. எப்பாடுபட்டாவது நானே சம்பாதிக்கிறேன் என்று சொன்னார். ஆனால், நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன். மீண்டும் கடன் வாங்கி, நான் சிங்கப்பூர் வருவதற்கு ஏற்பாடு செய்தோம். இதோ, நான் சிங்கப்பூர் வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது. கணவர், குழந்தைகள் எல்லாம் ஊரில் இருக்கிறார்கள். இங்கு நான் தனியாக வசிக்கிறேன். ஒவ்வொரு நாளும், என் பிள்ளைகளின் முகத்தை மொபைல் வழியாகவே பார்க்கிறேன்.

ஒரு தாயாக அரவணைக்க வேண்டிய இடத்தில் நான் இல்லையே என்ற கவலை ஒவ்வொரு நாளும் என்னை வாட்டுகிறது. ஆனால், என்ன செய்வது? அதைவிட வறுமை கொடுமை அல்லவா. என் பிள்ளைகள் அம்மா இல்லாமல் கூட இருந்துவிடலாம். சாப்பாடு இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இப்போது நான் சம்பாதித்து, சொந்த ஊரில் ஒரு சிறிய வீடும் கட்டிவிட்டேன். என் கணவர் சிங்கப்பூர் வந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை நான் செய்துவிட்டேன். அந்த மனநிறைவு எனக்கு இருக்கிறது.

ஆணோ, பெண்ணோ… வறுமை என்று வந்துவிட்டால் உழைத்து தானே ஆக வேண்டும். எப்போது இந்த சிறையில் இருந்து விடுபட போகிறேன் என்று தெரியவில்லை. எப்போது என் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. எப்போது அவர்களுக்கு டீ போட்டு தர போகிறேன் என்று தெரியவில்லை. எப்போது அவர்களை அருகில் இருந்து கண்டிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.

இன்று பணம் என் கைகளில் இருக்கிறது. ஆனால், மனநிறைவு இல்லை. எனினும், இந்த சிங்கப்பூர் எனது குடும்ப வறுமையை போக்கிவிட்டது. இதற்காக நான் என்றும் இந்த மண்ணுக்கு கடமைப்பட்டவளாக இருப்பேன். என் உயிர் இங்கே போனாலும் அதை நினைத்து கவலைப்பட மாட்டேன்” என்று முடித்துக் கொண்டார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts