சமீப காலமாக வட இந்தியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ஏராளமான விமானங்கள் சரியான நேரத்தில் புறப்பட முடியாமல் தாமதமாகின்றன.
அதிலும் குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மேலும் கடந்த ஜனவரி 14, ஞாயிற்றுக்கிழமை 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன, சுமார் 100 விமானங்கள் தாமதமாகிவிட்டன. மேலும் சில விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், கடந்த ஜனவரி 14, ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து கோவா நோக்கி செல்லவிருந்த இண்டிகோ நிறுவனத்தின் 6E-2175 விமானம் பனிமூட்டம் காரணமாக 13 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பயணியொருவர், விமானத்தின் கடைசியிலிருந்து வேகமாக எழுந்து வந்து, பயணிகள் முன்பு தாமத அறிவிப்பை வெளியிட்ட துணை விமானியை கன்னத்தில் தாக்கியுள்ளார். இதனால் அவர் விமானத்தில் இருந்து உடனே இறக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம், அப்பயணி மீது வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அவரது பெயரை நோ பிளை லிஸ்ட் ல் சேர்க்க பரிந்துரை செய்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டிசிபி கூறுகையில், தவறாக நடந்து கொண்ட பயணி மீது துணை விமானி அளித்த புகாரின் பேரில், ஐபிசி பிரிவு 323/341/290 மற்றும் 22 விமான விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிற நிலையில், உடன் பயணித்த பயணிகள் மற்றும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் , இருபக்கமும் தவறு இருப்பதாக காணொளி பார்த்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாவதற்கு விமான ஊழியர்கள் என்ன செய்ய முடியும் என்றும் அவர்களிடம் இவ்வாறு நடந்துக் கொள்வது மிகவும் தவறான நடத்தை மற்றும் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் சிலர் கூறியுள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தின் போது, விமானத்தில் இருந்த மற்றொரு பயணி இண்டிகோ விமான நிறுவனமானது , பயணியின் இந்த வன்முறை செயலை சாக்காக வைத்து தன்னுடைய தவறான நிர்வாகத்தையும், தவறையும் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் காலை 7.40 க்கு புறப்பட வேண்டிய விமானம் மாலை 5.35 க்கு தான் , பல தாமத அறிவிப்பிற்கு பிறகு புறப்பட்டதென்றும், குழந்தைகள், முதியவர் உட்பட186 பயணிகளுக்கு தண்ணீர் கூட தராமல் பல மணி நேரம் விமானத்திற்குள் அடைத்து வைத்தது எவ்வாறு சரியாகும் என்றும் கேட்டுள்ளார். மாலை 4 மணிக்கே அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் வன்முறையைத் தான் ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
விமான ஊழியர்களுக்கு DGCA வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்
இத்தகைய பயணிகளின் ஒழுங்கற்ற வன்முறை சம்பங்களின் போது, விமான குழு ஊழியர்கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) சில செயல்முறை வழிமுறைகளைத் தந்துள்ளது. அவற்றைப் பார்ப்போம்
வழிகாட்டுதல்களின்படி, பயணிகளின் நடத்தை ஒழுங்கற்ற தவறானதாக கருதப்பட்டால், அவர்கள் கைது செய்யப்படலாம் என்பதை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு விமான நிறுவனம் முதலில் தெரிவிக்க வேண்டும்.
மேலும் பயணிகளின் ஒழுங்கற்ற தவறான நடத்தைகளாக DGCA பின்வருவனவற்றை தெரிவித்துள்ளது.
மதுபானம் அல்லது போதைப்பொருட்களை உட்கொள்வது, புகைபிடிப்பது, விமானியின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியாதது, விமான பணியாளர்கள் அல்லது பிற பயணிகளுக்கு எதிராக அச்சுறுத்தும் அல்லது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், உடல் ரீதியாக அச்சுறுத்தும் மற்றும் தவறான நடத்தை, பணியாளர்களின் கடமைகளை நிறைவேற்றுவதில் வேண்டுமென்றே தலையிடுவது; மேலும் விமானம் மற்றும் அதில் உள்ளவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது.
மேலும் விமானம் பறக்கும் போது, பயணி வன்முறையாக நடந்து கொண்டால் விமானக் குழுவால் அந்த பயணியை கட்டுப்படுத்த முடியுமா என்பதை விமானி விரைவாக முடிவு செய்து, அதற்கேற்ப தரையிலுள்ள விமானத்தின் மையக் கட்டுப்பாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை விமானக் குழுவால் நிலைமையை சமாளிக்க முடியாது என்று தெரிந்தால், விமானி உடனடியாக அருகில் இருக்கும் விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு விமானத்தை தரை இறக்க வேண்டும்.உடனே,சம்பந்தப்பட்ட பயணியை விமான நிலைய காவல் அதிகாரிகளிடம் FIR வழக்கு பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும்.
தவறாக நடந்து கொள்ளும் பயணி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
மேலே சொன்னவாறு தவறாக நடந்துகொள்ளும் பயணியின் மீது, புகார் அளிக்கப்படும்போது, அது சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் 3 பேர் கொண்ட உள் கமிட்டியால் விசாரணை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட பயணி எத்தனை நாட்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது என்று கமிட்டியே முடிவு செய்கிறது. கமிட்டியின் முடிவிற்கு விமான நிறுவனம் கட்டுப்பட்டது.