TamilSaaga

“சிங்கப்பூர் OCBC வங்கி சம்பந்தப்பட்ட மோசடிகள்” : 469 வாடிக்கையாளர்களிடம் சுருட்டப்பட்ட 8.5 மில்லியன் – அம்பலமானது எப்படி?

கடந்த ஆண்டு டிசம்பர் 29 வரை, 469 வாடிக்கையாளர்கள் OCBC வங்கி சம்பந்தப்பட்ட ஃபிஷிங் மோசடிகளால் மொத்தம் S$8.5 மில்லியன் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, டிசம்பர் 24 முதல் 26 வரையிலான கிறிஸ்துமஸ் விடுமுறைகளில் மட்டும் 186 வாடிக்கையாளர்கள் S$2.7 மில்லியன் வரை இழந்துள்ளனர். டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17 வரையிலான தேதிகளில் 26 வாடிக்கையாளர்கள் S$140,000 வரை இழந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் வேலை தொடர்பான நிகழ்ச்சிகள் : ஜனவரி 3 முதல் அமலாகும் “புதிய தளர்வு” – சுகாதார அமைச்சகம்

முதன்முறையாக, டிசம்பர் 23 அன்று, OCBC இந்த மோசடிகள் அதிகரிப்பதைக் குறித்து ஊடகங்களில் எச்சரித்தது. புத்தாண்டு வார இறுதியில் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து டிசம்பர் 30 அன்று, தனது இரண்டாவது எச்சரிக்கையையும் வெளியிட்டது. இழந்த பணத்தை மீட்பது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறும்போது, “வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து நிதிகள் வெளியேறியவுடன், மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. இதுபோன்ற மோசடிகள் ஏற்படாதவாறு, வாடிக்கையாளர்கள் தான், தங்கள் பணத்தை முதலில் காத்துக் கொள்ள வேண்டும்”, என்று குறிப்பிட்டுள்ளனர்.

மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

OCBC வங்கியின் கூற்றுப்படி, வங்கிக் கணக்குகளில் அல்லது கிரெடிட் கார்டுகளில், சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறி வங்கியிலிருந்து பொதுமக்கள் SMS-களைப் பெறுவார்கள். இது “ஸ்பூஃபிங்” என்று அழைக்கப்படுகிறது, இந்த வகையில் மோசடி செய்கிறவர்கள், பொதுவாக, ஒரு முறையான அனுப்புநரின் பெயர் மற்றும் குறுகிய குறியீட்டை குளோனிங் செய்வதன் மூலம் வங்கியைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள் – தற்போது நடந்த மோசடியில், OCBC – SMS மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற மோசடி செய்பவரின் எஸ்எம்எஸ், முறையான அனுப்புநரிடமிருந்து அனுப்பப்படுவது போல தோன்றும். இம்முறை வங்கியிலிருந்து வரும் முறையான எஸ்எம்எஸ்கள் போன்றே, அதே தொடரிழையில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த எஸ்எம்எஸ்களில் வங்கித் தகவல் மற்றும் கடவுச்சொற்களைக் கோரும் பாதுகாப்பான வங்கி இணையதளம் போல் , போலியான மோசடி இணையதளத்திற்கான இணைப்பு இருக்கும்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் – மலேசியா வான்வழி VTL” : ஜனவரி 21 அன்று மீண்டும் துவங்குமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? – அமைச்சர் விளக்கம்

வழக்கமாக இந்த குறும் செய்திகளில் போலியான இணையதள முகவரி இணைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் அந்த இணையதள முகவரியை கிளிக் செய்தவுடன், அவர்களின் பயனர்பெயர், பின் நம்பர் மற்றும் OTP போன்ற முக்கியமான வங்கிக் கணக்கு உள்நுழைவுத் தகவலைக் குறிப்பிடும்படி கேட்கப்படுவார்கள். வாடிக்கையாளர்கள் ஏமாந்து இந்த தகவல்களை வெளிப்படுத்திவிட்டால், உடனடியாக அவர்கள் கணக்குகளில் உள்ள பணம், பல்வேறு கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.

இதனால், ஏமாற்றுபவர்களின் நகர்வை கண்காணிப்பது மிகக் கடினமான ஒரு விஷயமாக மாறுகிறது. மேலும் பணத்தை மீட்டெடுப்பது அதனை விட மிகப் பெரிய விஷயமாக கருதப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மோசடிகளில் சிக்குவதை எவ்வாறு தவிர்க்க வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் ஆலோசனையின்படி, கணக்கு முடக்கப்படுவது அல்லது அவர்களின் கணக்குகள் முடிக்கப்படுவது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி ஒருபோதும் எஸ்எம்எஸ் அனுப்பி தெரிவிக்காது. மாறாக, வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை அனுப்பும் – இவை சந்தேகத்தைத் தவிர்ப்பதை உறுதிசெய்து ஆன்லைன் மோசடியைத் தடுக்கும்.

12 மாதங்கள் பணப்பரிமாற்றம் செய்யப்படாத நிலையில், வாடிக்கையாளர்களின் கணக்குகள், செயலிழந்துவிடும். மீண்டும் செயல்படுத்துதல் கிளைகளில் அல்லது இணைய வங்கி மூலம் நேரில் மட்டுமே செய்யப்படுகிறது. கணக்குகளை மீண்டும் செயல்படுத்த, இணைப்புடன் கூடிய SMS ஐ வங்கி ஒருபோதும் அனுப்பாது.

எஸ்எம்எஸ்களில் உள்ள இணைப்புகளை வாடிக்கையாளர்கள் கிளிக் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக, அவர்கள் OCBCயின் அதிகாரப்பூர்வ மொபைல் பேங்கிங் பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் அல்லது URL – ல் நேரடியாக இணையதளத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். உள்நுழைவு ஐ டி-கள், கடவுச்சொற்கள் அல்லது OTPகள் போன்ற முக்கியமான தகவல்களை யாருக்கும் வழங்கக்கூடாது அல்லது சரிபார்க்கப்படாத வலைப்பக்கங்களில் இந்த முக்கியமான தகவல்களை சேர்க்கக்கூடாது.

அவர்களுக்கு சந்தேகம் இருந்தால், அவர்கள் OCBC ஹாட்லைனை நேரடியாக (65) 6363 3333 என்ற எண்ணில் அழைக்க வேண்டும், SMS இல் வழங்கப்பட்ட எந்த எண்களையும் அழைக்கக்கூடாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts