TamilSaaga

சிங்கப்பூர் பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? ஜிஎஸ்டி உயர்வு முதல் தொழிலாளர்களுக்கு உதவி தொகை வரி… Complete report

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை இழப்பு ஆகிய பிரச்னைகளை சிங்கப்பூர் எதிர்க்கொண்டு வரும் சூழலில், இதற்கான தீர்வுகளை நோக்கி சிங்கப்பூர் அரசின் பட்ஜெட் 2023 நகரும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

2023-ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் அரசின் பட்ஜெட்டை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வாங், பிப்ரவரி 2023 மாலை 3.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இதுபற்றி ஏற்கெனவே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், பட்ஜெட் மக்களுக்கு காதலர் தின பரிசாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் விலைவாசி உயர்வால் அதிகமாக பாதிக்கப்படும் வருவாய் குறைவாக இருக்கும் சிங்கப்பூர் மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022 பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி உயர்வால் பாதிக்கப்படுவோருக்கு நிதி உதவியாக 6.6 பில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர், இதில் கூடுதலாக 1.4 பில்லியன் சிங் டாலர்கள் சேர்க்கப்பட்டு 8 பில்லியன் சிங் டாலர்கள் மதிப்பிலான திட்டமாக இது மாற்றப்பட்டது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த மதிப்பு உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போரால் உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரரீதியிலான தாக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு போன்றவற்றால் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு ஒரு சதவிகிதமும், ஜனவரி 9-ம் தேதி முதல் கூடுதல் ஒரு சதவிகிதமும் உயர்த்தப்பட்டு இப்போது 8% ஆக இருக்கிறது. வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து 9 சதவிகிதமாக உயர இருக்கிறது. இதனால், விலைவாசி கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது. பணவீக்கத்தைப் பொறுத்தவரை 2021-ல் 4.1% ஆக இருந்தது, 2022 டிசம்பரில் 5.1% ஆக இருந்தது. இதனால், விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நேரடியாக மானியங்கள் அளித்து, அதைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிடலாம் என்றும் அதுபற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது.

சிறு குறு தொழில்நிறுவனங்களைப் பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி உயர்வால் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிதி உதவி வழங்கவும் அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே கடந்த ஜூன் 2021-ல் அறிவிக்கப்பட்ட 1.5 பில்லியன் சிங் டாலர் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல், இந்த தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கடன் தொகையும் ஜூலை 2022 – மார்ச் 2023 காலகட்டத்துக்குள் 5 மில்லியன் சிங் டாலர்களில் இருந்து 10 மில்லியன் சிங் டாலர்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கான உதவித் தொகையும் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Related posts