பேருந்து, ரயில், கப்பல் என எத்தனை போக்குவரத்து இருந்தாலும், விமான போக்குவரத்து என்பது எப்போதும் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு உட்படுத்தப்படும். ஏனெனில், 1 சதவிகிதம் கூட வான்வழி போக்குவரத்தில் ஆபத்து ஏற்படக் கூடாது என்பதே இதற்கு காரணம்.
அந்த வகையில், இந்தியாவில் உள்ள மங்களூரு விமான நிலையத்தில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று, பயணிகள் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஆம்! மங்களூரூ ஏர்போர்ட்டில் இருந்து மும்பைக்குச் செல்ல வேண்டிய Indigo விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது. பயணிகள் நிரம்ப இருந்த அந்த விமானத்தில், கிளம்ப இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், அருகில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவரின் மொபைலின் வாட்ஸ் அப்-ல் வந்த ‘நீ ஒரு வெடிகுண்டு வீசுபவர்’ (You Are A Bomber) என்று மெசேஜை பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த பெண் பயணி ஒருவர் தற்செயலாகப் படித்துவிட்டார்.
சக பயணியின் மொபைலில், அதுவும் விமானம் கிளம்பப் போகும் நேரத்தில் இப்படியொரு மெசேஜை பார்த்தால் எப்படி இருக்கும்? பதறிய அந்த பெண் பயணி, உடனடியாக விமான பணிப்பெண்களை கூப்பிட்டு தகவல் சொல்ல, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அனைத்து பயணிகளின் உடமைகளும் ஒன்று விடாமல் கிண்டி கிளறப்பட்டது. இறுதியில், குறிப்பிட்ட அந்த பயணி தனது தோழியுடனான வாட்ஸ் அப் சாட்டில், விளையாட்டுக்காக அப்படி அனுப்பினார் என்பதும், அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பிறகு, ஒருவழியாக 185 பயணிகளும் மீண்டும் விமானத்தில் ஏற்பட்டு, சுமார் 6 மணி நேர தாமதத்துக்கு பிறகு மும்பை கிளம்பிச் சென்றனர். அதுவும் பீதியுடன். ஒரு சாதாரண விளையாட்டு பேச்சால், ஒரு விமானமே 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு, அனைவரின் வேலையும் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் மும்பை சென்று சேர முடியாமல் போய்விட்டது.
அதேசமயம், போலீசாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.