MALAYSIA: நேற்று (ஆகஸ்ட் 18) மலேசியாவின் ஜோகூரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் சிங்கப்பூரைச் சேர்ந்த நபருக்கும் அவரது மலேசிய காதலிக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி என்ன தவறு செய்தார்கள்?
சிங்கப்பூரைச் சேர்ந்த லோ கோக் கியோங் (49) மற்றும் அவரது காதலி சோ யோங் சின் (32) ஆகியோர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மலேசியாவின் ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருளுடன் பிடிபட்டனர்.
போதைப்பொருள்ன்னா எதோ துண்டு துக்கடா இல்லீங்க… அவர்கள் 9.6 கிலோவுக்கும் அதிகமான மெத்தம்பேட்டமைனை (methamphetamine) கடத்தியதாகவும், 666 கிராம் கெட்டமைனை (ketamine) வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள இஸ்கந்தர் புத்தேரி மாவட்டத்தில் உள்ள தாமன் சுதேரா எனும் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில், 139 கிராம் நிமெட்டாசெபம் (nimetazepam) கடத்தியதாகவும், தனது உடலில் மெத்தாம்பேட்டமைனை செலுத்தியதாகவும் லோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஒட்டுமொத்தமாக லோ மீது ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவரது காதலி சோஹ் இரண்டு மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது .
இதில், மெத்தாம்பேட்டமைனை உட்கொண்ட குற்றச்சாட்டை லோ ஒப்புக் கொண்டுவிட்டார்.
மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் வழக்கு என்பதால், வழக்கறிஞர்கள் யாரும் தம்பதிகள் சார்பாக ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் வாதாட யாரும் இல்லாததால், தம்பதிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வழக்குகள் இப்போது மலேசிய உயர்நீதிமன்றத்தில் உள்ளன. மீண்டும் செப்டம்பர் 20 அன்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெறுகிறது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மலேசியாவில் குற்றம் சாட்டப்பட்ட இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் அல்லது குறைந்தபட்சம் 15 சாட்டை அடியுடன், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.